GOAT: ரகசியமாக கோட் படம் பார்த்த விஜய்... கூட இருந்தது யாருன்னு தெரியுமா..? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் அவரது ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கே தெரியாமல் கோட் படம் பார்த்துள்ளார் விஜய்.

Sep 5, 2024 - 11:23
Sep 5, 2024 - 17:36
 0
GOAT: ரகசியமாக கோட் படம் பார்த்த விஜய்... கூட இருந்தது யாருன்னு தெரியுமா..? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
கோட் படம் பார்த்த விஜய்

சென்னை: கோட் திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களிலும் கோட் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் அதிகாலை 4 மணிக்கு கோட் படம் வெளியானது. சென்னை உட்பட தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள தமிழக ரசிகர்கள், அக்கட தேசங்களுக்கு பறந்துவிட்டனர்.

அதோடு கோட் 4 மணி FDFS பார்த்துவிட்டு படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் சென்னை ரசிகர்களுக்கு கோட் படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அதன்படி மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கோட் திரைப்படம் பார்த்தார் த்ரிஷா. அவருடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் படம் பார்க்கச் சென்றிருந்தார். த்ரிஷா, அர்ச்சனா கல்பாத்தி இருவரையும் தொடர்ந்து விஜய்யும் ரசிகர்களுடன் சேர்ந்து கோட் படம் பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளது.

அதாவது ரிலீஸுக்கு முன்பே கோட் படத்தை பார்த்துவிட்டாராம் விஜய். ஃபைனல் வெர்ஷன் ரெடியாகும் முன்பே கோட் படம் பார்த்த விஜய், இயக்குநர் வெங்கட் பிரபுவை பாராட்டியிருந்தார். அதன் பின்னர் எடிட் செய்யப்பட்ட ஃபைனல் வெர்ஷனையும் தற்போது பார்த்துள்ளார் விஜய். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில் தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து கோட் படத்தை பார்த்துள்ளாராம். அப்போது விஜய்யுடன் இயக்குநர் வெங்கட் பிரபு, யுவன் ஆகியோரும் இருந்துள்ளனர். இதனால் ரசிகர்களுடன் கோட் படம் பார்க்க விஜய் தியேட்டர் வரமாட்டார் என சொல்லப்படுகிறது. முன்னதாக சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் அல்லது சத்யம் சினிமாஸில் விஜய் கோட் படம் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - விஜய்யின் கோட் படம் டிவிட்டர் விமர்சனம்

இந்நிலையில், கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸில் கோட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். கோட் ரிலீஸாகும் வரை இதுபற்றி படக்குழு எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. ஆனால் இன்று படம் வெளியானது முதலே விஜய்யுடன் சேர்ந்து சிவகார்த்திகேயனையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், இயக்குநர் வெங்கட் பிரபுவும் கோட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை கமலா திரையரங்கில் கோட் படத்தின் காலை 9 மணி முதல் காட்சியை தொடங்கி வைத்த வெங்கட் பிரபு, புரொஜெக்டர் ரூமில் இருந்தபடி ரசிகர்களுடன் உரையாடினார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகினர். ஆனாலும் விஜய் தியேட்டர் வராமல் ஏமாற்றிவிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். விரைவில் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கவுள்ள விஜய், கோட் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கலாம் எனவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விஜய்யுடன் அவரது குடும்பத்தினரும் கோட் படம் பார்த்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், மனைவி சங்கீதா மட்டும் மிஸ்ஸிங் என சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow