பற்றி எரியும் பாலியல் புகார்கள்... பரபரப்பான சூழலில் நடிகர் சங்க பொதுக்குழு

நடிகைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து சிறப்பு தீர்மானம், இந்த கூட்டத்தில் நிறைவேறப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Sep 6, 2024 - 16:48
 0

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம், நாளை மறுநாள் சென்னை காமராஜர் அரங்கில்  நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சிமுருகன் தலைமையில்   காலை 10 மணிமுதல் நடக்கும் இந்த பொதுக்குழுவில் சென்னை மற்றும் வெளியூர்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான நடிகர்கள், நாடக நடிகர்கள்கலந்து கொள்வார்கள். சங்க உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கே மருத்துவமுகாமும் நடக்கிறது.

* இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான பழம்பெரும் நடிகை விஜயகுமாரி, நடிகர் டெல்லிகணேஷ் ஆகியோர் கவுரவிக்கப்படுகிறார்கள். அதை தொடர்ந்து நடிகர் சங்க கட்டட நிலை, நிதி திரட்டல், அதற்கான கலைநிகழ்ச்சி மற்றும் நடிகர்களின் சம்பளம், விரைவில் நடக்க உள்ள சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட பலமுக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

* ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாள சினிமாவில் பூகம்பம் வெடித்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் பாலியல் புகார்கள் குறி்த்து விசாரிக்க, நடவடிக்கை எடுக்க நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகை ரோகிணி தலைமையில் சிறப்பு கமிட்டி அமைத்துள்ளது. புகாரில் சிக்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை, சட்டரீதியான பாதுகாப்பு, புகார் தெரிவிக்க போன் நம்பர், இமெயில் ஆகியவை அந்த கமிட்டி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த கமிட்டி குறித்தும், சங்க உறுப்பினர்கள் சந்திக்கும் பாலியல் புகார் குறித்தும் நடிகர் சங்க கூட்டத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

* நடிகர் சங்கத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. நடிகர் சங்க கட்டட பணிகள் முடியாத நிலையில் அந்த தேர்தலை ஒத்தி வைக்கலமா? இதே நிர்வாகத்தக்கு பதவி நீடிப்பு வழங்கலாமா என்பது குறித்தும் பொதுக்குழுவில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

* மேலும் இந்த பொதுக்குழுவில் நடிகர்களின் சம்பளம், தயாரிப்பாளர் சங்கம் சில நடிகர்கள் மீது அளித்துள்ள புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட உள்ளது.

* தென்னிந்திய முழுக்க பல நடிகைகள் பரபரப்பாக பாலியல் புகார்கள் கூறி வரும் பரபரப்பான சூழ்நிலையில், தெ ன்னிந்திய நடிகர் சங்கத்தின் இந்த கூட்டம் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. நடிகைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் புகார் மீதான நடவடிக்கைகள் குறி்த்து சிறப்பு தீர்மானமும் இந்த கூட்டத்தில் நிறைவேறப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow