தமிழ்நாடு பி.இ கவுன்சிலிங் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ்.. ஜூலை 22ல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Jul 10, 2024 - 12:21
Jul 10, 2024 - 14:49
 0
தமிழ்நாடு பி.இ கவுன்சிலிங் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ்.. ஜூலை 22ல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்
TNEA Counselling 2024

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA-2024) செயல்முறை மே 6 அன்று தொடங்கியது, சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை செயல்முறைகளை முடித்துள்ளனர். இதனையடுத்து ஜூன் 6 ஆம் தேதியன்று ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் பதிவேற்றம் ஜூன் 12 அன்று நிறைவடைந்தது. ஜூன் 13 முதல் ஜூன் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. 

இந்தநிலையில், இன்று (ஜூலை 10) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 65 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். 
தமிழக அரசின் tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் தரவரிசைப் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.

அரசு பள்ளி மாணவர்களில் சேலம் வீரபாண்டி மாடல் அரசு பள்ளி மாணவி ராவணி 199.50கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கோயம்புத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ணா அனுப் 198.50 பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். வேலூர் மாவட்டத்தை சார்ந்த காங்கேயநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சரவணன் 198.5 0 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். 

இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 2,53,954 பொறியியல் கலந்தாய்விற்காக கட்டணம் செலுத்தி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட மாணவர்களின்  எண்ணிக்கை 2 09,645. 7.5% இட ஒதுக்கீட்டில் மொத்தம் விண்ணப்பித்தவர்கள் 36,532 அவர்களில் தகுதி வாய்ந்த  32,223 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு அட்டவணையையும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டது.அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு இடங்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதேபோல் பொதுப் பிரிவில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 25 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பொதுப் பிரிவு, 7.5% இடஒதுக்கீட்டு பொதுப் பிரிவு, தொழிற்படிப்புகள் பிரிவு ஆகியவை அடங்கிய பொது கலந்தாய்வு ஜூலை 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.எஸ்.சி.ஏ இடங்களை எஸ்.சி மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. செப்டம்பர் 11 ஆம் தேதியுடன் கவுன்சலிங் செயல்முறை முடிவடைகிறது. இவ்வாறு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow