CM Stalin : 'இனி விண்வெளியில் அரசு பள்ளி மாணவர்களின் ஆட்சி'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Tamil Nadu Govt School Students : ''2022ம் ஆண்டு 75 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை நிறுவனங்களில் பயில தேர்வாகினர். 2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்த ஆண்டு 447 மாணவர்களும் உயர்கல்வியில் பயில தேர்வாகியுள்ளனர். இது வரும் நாட்களில் மேலும் உயரும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Aug 2, 2024 - 14:09
Aug 3, 2024 - 10:10
 0
CM Stalin : 'இனி விண்வெளியில் அரசு பள்ளி மாணவர்களின் ஆட்சி'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
CM Stalin on Tamil Nadu Govt School Students

CM Stalin on Tamil Nadu Govt School Students : நாட்டின் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின், விழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப்புகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ''நமது திராவிட மாடல் ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுளாக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் இந்தியாவின் முதன்மை நிறுவனங்களில் பயில தேர்வாகி வருகின்றனர்.

2022ம் ஆண்டு 75 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை நிறுவனங்களில் பயில தேர்வாகினர்.  2023ம் ஆண்டு  274 மாணவர்களும்,  இந்த ஆண்டு 447 மாணவர்களும் உயர்கல்வியில் பயில தேர்வாகியுள்ளனர். இது வரும் நாட்களில் மேலும் உயரும். திராவிட ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நமது அரசு பள்ளி மாணவர்கள் எந்த உயரத்தையும் எட்டிப் பிடிப்பார்கள். விண்வெளியிலும் இனி அரசு பள்ளி மாணவர்கள்தான் ஆட்சி செலுத்துவார்கள்.

நான் முதல்வன் இணையதளம் மற்றும் மணற்கேணி செயலியில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ள பொதுத் தேர்வு வினாத்தாள்கள் உள்ளன. இதன்மூலம் பயன்பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தைவான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில செல்கின்றனர்.

14 மாணவர்கள் தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளனர். அவர்கள் பயணம் செய்யும் முழு செலவை அரசு செய்யும். உங்கள் நாட்டுக்கு படிக்க வரும் எங்கள் மாணவ குழந்தைகளை, உங்களின் குழந்தைகளாக பார்த்துக்கொள்ள வேண்டும் என தைவான் மற்றும் மலேசிய தூதர்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுகிறேன்.

தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக தான் மாணவர்கள் உங்கள் நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். உங்கள் பிள்ளைகள் போல் எங்கள் மாணவர்களை பார்த்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கு வேண்டிய உந்துதல்களை வழங்க வேண்டும். அதற்கு அரசு உடன் நிற்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய ஸ்டாலின், ''இந்த நிலைக்கு நீங்கள் பல தடைகளை தாண்டி வந்து உள்ளீர்கள். இனியும் உங்களுக்கு தடைகள் வரலாம். ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தன்னம்பிக்கை உள்ளவர்களாக உயருங்கள். தமிழ்நாடு பெருமை பட  இந்தியா பெருமை பட நீங்கள் உயர தமிழக முதலமைச்சராக மட்டுமல்ல உங்களில் ஒருவராக கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow