திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.

Nov 24, 2024 - 19:45
 0
திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!
திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு தயாரிப்பதற்கு மூலப்பொருளாக நெய் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி லட்டு குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், லட்டு தயாரிக்கப்படும் நெய்யில், விலங்குகள் கொழுப்பு இருப்பதாக அறிக்கை வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தலைமையில் திருப்பதியில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கும் விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால்  இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முறையாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொள்ள நேற்று (நவ. 23) திண்டுக்கல் புறப்பட்டு சென்றது. அங்கு ஏ ஆர் டைரி ஃபுட் நிறுவனத்தில் 14 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டது. தற்போது இந்த ஆய்வு நிறைவடைந்துள்ளது. ஏ ஆர் டைரி ஃபுட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்களை ஆய்விற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், கணக்குகள், ஏடுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow