தேசபக்தியை அழிக்கும் காங்கிரஸ்... நேர்மையற்ற கட்சி.. பிரதமர் மோடி சாடல்!

நாட்டிலேயே மிகவும் நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்தான் என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

Oct 2, 2024 - 17:15
 0
தேசபக்தியை அழிக்கும் காங்கிரஸ்... நேர்மையற்ற கட்சி.. பிரதமர் மோடி சாடல்!
தேசபக்தியை அழிக்கும் காங்கிரஸ்... நேர்மையற்ற கட்சி.. பிரதமர் மோடி சாடல்

ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு ஹரியானா முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் முக்கிய கட்சிகளான பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்தனியே நின்று தேர்தலை சந்திக்கின்றன. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில் ஹரியானாவின் பல்வால் தொகுதியில் பிரதமர் மோடி நேற்று (அக். 1) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டின் அனைத்து முக்கியமான பிரச்சனைகளிலும் காங்கிரஸ் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மறுத்தார்கள். முத்தலாக் பிரச்சனையில் இருந்து நமது முஸ்லிம் சகோதரிகளை விடுவிக்காமல் வைத்திருந்தது காங்கிரஸ் கட்சிதான்.

காங்கிரஸ் நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவில்லை, மாறாக தங்கள் சொந்த குடும்பத்தை அதிகாரத்திற்கு கொண்டு வர முழு சக்தியையும் பயன்படுத்தினார்கள். காங்கிரஸ் இதுவரை எத்தனையோ பாவங்களை செய்திருக்கிறது. ஆனால் இன்னும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கனவு காண்கிறது. பாஜக ஆதரவாளர்கள் தேசபக்தர்கள். தேசபக்தியுள்ள மக்களை தவறாக வழிநடத்தும் திட்டங்களை காங்கிரஸ் தீட்டுகிறது. சாதி பிரிவினையை பரப்புவதன் மூலமும், ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொரு சமூகத்தை தூண்டிவிடுவதன் மூலமும் இந்த நாட்டில் இருந்து தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது.

காங்கிரஸ் கட்சி வேலை செய்வதும் இல்லை, மற்றவர்களை வேலை செய்ய விடுவதும் இல்லை. அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். அதே சமயம் பாஜக கடின உழைப்பில் கவனம் செலுத்துகிறது. காங்கிரஸ் ஒருபோதும் கடினமாக உழைக்கவில்லை. திருப்திப்படுத்தும் அரசியலை செய்வதே காங்கிரஸ் கட்சியின் திட்டமாக உள்ளது. தங்கள் வாக்கு வங்கியை திருப்திப்படுத்துவதற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. கர்நாடகத்தில் இதைத்தான் செய்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க: காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

நாட்டிலேயே மிகவும் நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்தான். இமாச்சல பிரதேச தேர்தலின்போது அங்குள்ள மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, 'உங்கள் வாக்குறுதிகள் என்ன ஆனது?' என்று காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் கேட்கிறார்கள். ஆனால் மக்களிடம் 'நீங்கள் யார்?' என்று கேட்கிறது. மத்தியில் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறதோ, அதே அரசாங்கம் ஹரியானாவிலும் அமைக்கப்படும் என்ற வரலாற்றை ஹரியானா கொண்டிருக்கிறது. டெல்லியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை அமைத்த நிலையில், இப்போது ஹரியானாவிலும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை அமைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow