அரசியல்

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை
திருமாவளவன் காந்தியை புறக்கணித்ததால் சர்ச்சை..

மது ஒழிப்பை உயிர் மூச்சாக கருதிய காந்தியடிகளின் நினைவு நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டை நடத்தும் வேலையில் காந்தியை திருமாவளவன் புறக்கணித்துள்ளார்.

இன்று அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு உளுந்தூர்பேட்டையில் நடைபெறுகிறது. இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்கின்றனர்.

முன்னதாக மாநாடு குறித்து கூறிய திருமாவளவன், “மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். பாதிக்கப்படுகிற பெண்கள் விடுகின்ற கண்ணீர், வலியை பேசாமல் கூட்டணி கணக்குகளை பற்றி பேசி இதை மடை மாற்றம் செய்கிறார்கள்.

கண்ணீர் விட்டு கதறுகின்ற தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் இந்த மாநாட்டை நடத்துகிறோமே தவிர, இதில் எந்தவித தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை. இதை நான் தேர்தலுக்கு நடத்தினால், இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை. கள்ளக்குறிச்சி மக்கள் நீங்கள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட மாட்டீர்களா என்று கேட்பார்கள். அதனால் தான் உடனடியாக போராட்டத்தை அறிவித்தேன்” என்றார்.

இந்நிலையில், தன் வாழ்நாள் எல்லாம் ஒழிப்பை உயிர்மூச்சாக வலியுறுத்தியவர் காந்தியடிகள் அவரது பிறந்தநாளில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தும் விடுதலை சிறுத்தைகள் அவருக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

காந்தியடிகளின் 156ஆவது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 49வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது இதனை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் காந்தி மண்டபத்திற்கு வருகை தந்தார் முதலில் அலங்கரிக்கப்பட்டிருந்த காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் நேரடியாக காமராஜர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய அவர் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றார்.

இது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடம் கேட்டபோது தங்கள் தலைவர் ஏன் மரியாதை செலுத்தாமல் சென்றார் என்று காரணம் தெரியவில்லை என்றும் அவர் மரியாதை செலுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்று கூறினார்