சென்னை: மகாராஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் 26-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது அங்கு சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இக்கூட்டணியில் பாஜக மட்டுமின்றி அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இடம் பிடித்துள்ளன. அதேபோல் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் அடுத்தாண்டு ஜனவரி 5ம் தேதியுடன் முடிகிறது. அங்கு தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியில் இருந்து சமீபத்தில் மூத்த தலைவர் சம்பாய் சோரன் வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.20ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் எனவும், அதனைத் தொடர்ந்து 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13, 20ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 13ம் தேதி ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
வயநாடு, அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள வயநாடு லோக்சபா தொகுதிக்கும் வரும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியுள்ளார். 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இது பாஜக கூட்டணியை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேபோல, ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சியை தக்க வைக்குமா அல்லது, பாஜக ஆட்சியை பிடிக்குமா என எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், 41 தொகுதிகளில் வென்றால் ஆட்சியமைக்க முடியும். இதனிடையே நவம்பர் 13ம் தேதி கேரளாவில் உள்ள 47 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், நவம்பர் 20ம் தேதி உத்தரகாண்ட்டின் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும் நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.