தூத்துக்குடி மாவட்டத்தின் 28வது ஆட்சியர்.. இளம்பகவத் ஐஏஎஸ்.. யார் இவர்?

தூத்துக்குடி மாவட்டத்தின் 28வது புதிய ஆட்சித்தலைவராக க.இளம்பகவத் பதவியேற்றுள்ளார். தனது விடாமுயற்சியால் ஐஏஎஸ் கனவை எட்டியவர் இளம்பகவத் தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியராக பதவியேற்றுள்ளார்.

Aug 21, 2024 - 12:47
Aug 21, 2024 - 12:51
 0
தூத்துக்குடி மாவட்டத்தின் 28வது ஆட்சியர்.. இளம்பகவத் ஐஏஎஸ்.. யார் இவர்?
k elambahavath ias

குடும்ப சூழ்நிலையால் பள்ளி படிப்பை  பாதியில் நிறுத்திய இளம்பகவத் விடாமுயற்சியால் அடுத்தடுத்து அரசு பதவிகளைப் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானர். கிராம நிர்வாக அதிகாரி பதவிக்காக பல ஆண்டு காத்திருந்த இளம்பகவத் ஐஏஎஸ் இன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்து வந்த பாதையையும் பயணத்தையும் பார்க்கலாம். 

இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழகன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. 2016ஆம் ஆண்டு தமிழக கேடர் அதிகாரியான இவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 117 வது இடத்தைப் பிடித்தார். `

இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய அப்பா கந்தசாமி, சோழகன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி.  வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். 

ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும் போது இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். குடும்ப சூழ்நிலையால் ப்ளஸ் 2 உடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு இருந்தது. அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, 1998ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். 

ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை.ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் பலனளிக்கவில்லை. 

அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில்  குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ வரலாறு படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத்.

2005ஆம் ஆண்டு வாக்கில் இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும் என நினைத்தார். அரசு தேர்வு எழுத முடிவு செய்து கடந்த  2007ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010ஆம் ஆண்டில் குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 

கடந்த 2014ஆம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை துரத்திக்கொண்டே இருந்தார்.

கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக 2016 ஆண்டு தன் கனவை எட்டினார் இளம்பகவத். 

இளம்பகவத் ஐஏஎஸ் ஏற்கெனவே பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்த நிலையில்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக தற்போது பதவியேற்றுக்கொண்டுள்ளார். கிராம நிர்வாக அதிகாரி பதவிக்காக பல ஆண்டுகள் காத்திருந்து சலித்துப்போய் குடிமைப்பணிக்கான தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ளார் இளம்பகவத் ஐஏஎஸ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow