HBD Chennai: வங்கக்கடலுக்கு எதிரே நிற்கும் கம்பீரம்.. வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநிலக் கல்லூரியின் கதை
இளைஞர்களின் கனவை சுமந்து கடலுக்கு எதிரே கம்பீரமாக அன்று முதல் இன்று வரை நின்றுக்கொண்டிருக்கும் சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாறு பற்றி விவரிக்கிறது இந்த சிறப்பு கட்டுரை

இத்தாலி அரண்மனை போன்ற மிடுக்கான தோற்றம்.. கடலுக்கு எதிரே இருக்கும் கட்டிடங்களிலேயே அதிக கம்பீரம்... இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரளும் உத்வேகம் என சென்னையின் முக்கிய மற்றும் மிக பழமையான ஒரு கல்லூரி என்றால் அது மாநிலக் கல்லூரி தான்.. அப்படி வரலாற்று சிறப்பு மிக்க இந்த கல்லூரி, ஒரு காலத்தில் பள்ளியாக தான் தனது பயணத்தை தொடங்கியது என்ற வரலாறை எத்தனை பேர் அறிவார்கள்? பிரசிடென்சி கல்லூரியின் வரலாறை சென்னை தின சிறப்பு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..
1800..பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்டுக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. அடிமைத்தனம், காலனியாதிக்கம் என பல இருந்த சூழலிலும், பல வளர்ச்சிகளை அப்போது கண்டது மெட்ராஸ். அதன் ஒருபகுதியாக உருவானதே இந்த பிரசிடென்சி கல்லூரி. 1862ம் ஆண்டில் ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ, public instruction கமிட்டி ஒன்றை உருவாக்கினார். கல்வி, ஆசிரியர் தேவை, பண ரீதியான விஷயங்களை கையாள்வதே இந்த கமிட்டியின் பணி. முக்கிய கமிட்டியாக திகழ்ந்த இந்த கமிட்டி 10 ஆண்டுகள் கழித்து, அதாவது 1836ல் committee of Native education கமிட்டியுடன் இணைக்கப்பட்டது.
கல்வி சார்ந்து இந்த கமிட்டி கொடுத்த திட்டங்கள் பெரிதும் ஈக்காததால், தாமாக களத்தில் இறங்கி சுயேட்சையாக 19 தீர்மானங்களை நிறைவேற்றினார் ஆளுநர் தாமஸ். இவர் கொண்டு வந்த தீர்மானங்களிலேயே ஒரு தீர்மானம் தான் தற்போது சென்னையில் இத்தனை பல்கலைக்கழகங்கள் உருவாக ஒரு விதையாக அப்போது இருந்தது. அதாவது மெட்ராஸில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற தீர்மானமே அது.
ஆளுநரின் இந்த முன்னெடுப்பால், 1840ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி சமூக ஆர்வலர்கள் சிலரால் எழும்பூரில் ஒரு வாடகை இடத்தில் தொடங்கப்பட்டது பிரசிடென்சி பள்ளி. ஒரு பள்ளியாக தனது பயணத்தை தொடங்கிய பிரசிடென்சியை அப்போது மெட்ராஸ் வாசியாக இருந்த சில ஆங்கிலேயர்களும், இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்த பள்ளியின் முதல்வராக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதத்தில் ஹானர்ஸ் முடித்த இ.பி.பவுல் நியமிக்கப்பட்டார். பிறகு 1841ல் பள்ளியாக இருந்த பிரசிடென்சி, உயர்நிலைப் பள்ளியானது மட்டுமல்லாமல், எழும்பூரில் இருந்து பிராட்வேவுக்கு இடம் மாற்றப்பட்டது. சுமார் 12 ஆண்டுகளாக சிறுவர்களின் விளையாட்டுதனத்தை மட்டுமே பார்த்த பிரசிடென்சியின் சுவர்கள், 1853ம் ஆண்டில் பிரசிடென்சி கல்லூரியாக வலுபெற்று வளர் இளம் பருவத்தினரின் வண்ணங்களை பெற்றது. 1875ம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதால் அதன்கீழ் முக்கிய கல்லூரியாக இணைந்தது மாநிலக் கல்லூரி.
மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க அதிகரிக்க கல்லூரிக்கு இந்த சிறிய இடம் போதாது என்பது உணரப்பட்டதால், புதிய கட்டடத்தை மெரினா கடற்கரைக்கு எதிரே அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. 1864ம் ஆண்டில் இந்த கட்டடம் சிறப்பானதாக அமையவேண்டும் என எண்ணியதால், இதற்கான வரைப்படத்தை அமைத்துத் தருபவருக்கு ரூ.3000 பரிசாக வழங்கப்படும் என்ற போட்டியும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை பற்றி தெரிந்துக்கொண்ட இங்கிலாந்தின் புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் ராபர்ட் சிஸ்ஹோம், இந்த ப்ராஜெக்டை கையில் எடுத்தார், இதற்கான பரிசையும் வென்றார். புகழ்பெற்ற நிபுணராக சிஸ்ஹோம் இருந்தாலும், அவர் மெட்ராசுக்காக கட்டடம் அமைப்பது அதுவே முதல் முறை. அதனால் அவர் வடிவமைத்த மாநில கல்லூரியின் கட்டடக்கலையில் இத்தாலிய பாணியின் தாக்கம் ஆதிகம் தெரியும்.
1867ம் ஆண்டில் மெட்ராஸ் ஆளுநர் லார்ட் நேப்பியர் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க, மூன்றே ஆண்டுகளில் எடின்பர்க் கோமகன் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது பிரசிடென்சி கல்லூரி. பிறகு 1940ல், நூற்றாண்டில் பிரசிடென்சி கல்லூரி காலடி எடுத்து வைக்க, அதன் நினைவாக 4 முகங்களை கொண்ட கடிகார கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. மணிக்கு ஒருதரம் ஒலிக்கும் இந்த கடிகாரத்தின் இசை திருவல்லிக்கேணி முழுவதும் கேட்கும் என பலரும் கூறுவர்.
மாநிலக் கல்லூரிக்கு வலுசேர்க்கும் விதமாக பல மதிக்கத்தக்க ஆசிரியர்களும் இங்கு பணியாற்றினர். தமிழ் தாத்தா ஊவேசா, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன், தமிழறிஞர் தொழுவூர் வேலாயுதம், இலங்கை தமிழறிஞர் சி.வை.தாமோதரன் உள்ளிட்டோர் இங்கு ஆசிரியராக பணியாற்றினர்.
மேலும் படிக்க: HBD Chennai: விசித்திரமான காரணத்திற்காக கட்டப்பட்ட நேப்பியர் பாலம்..வரலாறு இதுதான்!
பிரசிடென்சி என்றால் சிறப்பு தான் அதிலும் அங்கு படித்த மாணவர்களால் அக்கல்லூரிக்கே தனி சிறப்பு இருந்தது. நோபல் பரிசை பெற்ற சர்.சி.வி.ராமன், டாக்டர்.சுப்பிரமணிய சந்திரசேகர், சிந்தனை சிற்பி சிங்கார வேலர், மூதறிஞர் ராஜாஜி, இந்தியாவின் முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் பிரசிடென்சியில் படித்தவர்கள் தான். இப்படி சிறப்புமிக்க வரலாற்றையும், இளைஞர்களின் கனவையும் சுமந்து கம்பீரமாக அன்று முதல் இன்று வரை நின்றுக்கொண்டிருக்கிறது சென்னை மாநிலக் கல்லூரி.
What's Your Reaction?






