இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து அதிமுக அன்னியப்பட்டு போகாது- கெளதமி
அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து நாங்கள் அன்னியப்பட்டு போக மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் அதிமுக சார்பில் பொங்கல் வைத்து மகளிருக்கு கோலப்போட்டி நடத்தும் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பொங்கல் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, மருத்துவர் அணி இணை செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கோலம் போட்ட பெண்களின் அனைத்து கோலங்களையும் பார்வையிட்டு முதல் மூன்று பரிசுகளை தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர். மேலும், பெண்களுடன் இணைந்து கௌதமி பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தேர்தல் மட்டும் அல்ல மக்களுக்காக எந்த சூழ்நிலையில் குரல் கொடுக்க வேண்டும் என்றாலும் நான் அந்த இடத்தில் இருப்பேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு கூட நான் செயல்பட்டு வருகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து நாங்கள் அன்னியப்பட்டு போக மாட்டோம். ஒரு தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றால் அதற்கான நிறைய யோசனைகளும் நியாயமான காரணங்களும் இருக்கும் என்று கூறினார்.
மேலும் படிக்க: அதிமுகவை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்- அமைச்சர் சாமிநாதன்
சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, தண்டனை கடுமையாக கொடுக்க வேண்டும் என்பது குற்றம் நடந்து முடிந்த பிறகு தான். நாங்கள் கேட்பது கொடூரமான குற்றம் நடக்கவே கூடாது என்பது தான் என்றார்.
விஜய் அரசியல் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் செயல்பாடுகளை போக போக பார்க்கலாம். அரசியல் என்பது மக்களுக்காக செயல்படக்கூடியது. மக்கள் எங்கு உள்ளனரோ அவர்களுக்கு மத்தியில் இருக்கிறது தான் சரியான அரசியல் என்றும் நாம் எடுத்துக் கொண்டுள்ள பொறுப்பிற்கு நியாயமானதும் என்றும் அவர் பதிலளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?