போலி மதுபான ஆலை நடத்தி வந்தவர் கைது.. தலைமறைவான நபருக்கு காவல்துறை வலை வீச்சு
போலி மதுபான ஆலை நடத்தி வந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
![போலி மதுபான ஆலை நடத்தி வந்தவர் கைது.. தலைமறைவான நபருக்கு காவல்துறை வலை வீச்சு](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_6794d454a5a06.jpg)
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் வாகன சோதனையின் போது வெளிநாட்டு மதுபான பாட்டில்களை ஆட்டோவில் கடத்திச் சென்ற நசீம்தீன், ராவூத்தர் நைனார் முகமது, அப்துல் காதர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ஆகியோரை அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணையில், கொடுங்கையூர் பகுதியில் கோபி என்பவர் வெளிநாட்டு காலி மதுபாட்டில்களை வைத்து அதில் பாண்டிச்சேரி, அரியானா, கர்நாடகா சரக்குகளை ஊற்றி வெளிநாட்டு மது என ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது. இவர் தான் கைதானவர்களுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோபி தங்கி இருந்த கொடுங்கையூர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி சீல் வைத்தனர்.
ஆனால் கோபி தலைமறைவானார். அவரை தேடி வந்த போலீசார் கோபியை நேற்று கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கொடுங்கையூர் காவேரி சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் வீட்டை வாடகைக்கு எடுத்து மதுபான போலி ஆலை நடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோபியின் தந்தை மீது கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்றது தொடர்பான வழக்குகள் இருக்கிறது. அவர் தான் கோபிக்கு இந்த தொழிலை கற்று கொடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோபி முதலில் தள்ளுவண்டி கடை நடத்தி வந்துள்ளார். ஆனால், அதில் போதிய வருமானம் கிடைக்காததால் போலி மதுபான சப்ளையில் ஈடுபட்டு சம்பாதிக்க தொடங்கி உள்ளார்.
சாலையோராமாக கிடைக்கும் காலி மது பாட்டிகளை சேகரித்து காயிலான் கடையில் கொடுப்பவர்கள் சிலருடன் பழக்கம் வைத்து கொண்டு 300 ரூபாய்க்கு பாண்டிச்சேரி சரக்கு பாட்டில்களை வாங்கி வெளிநாட்டு காலி மதுபாட்டிலில் ஊற்றி சப்ளை செய்து வந்துள்ளார். 300 ரூபாய்க்கு போலி சரக்கு தயார் செய்து மூன்றாயிரத்திற்கு விற்று சம்பாதித்து வந்துள்ளார் கோபி. இதில் முக்கிய குற்றவாளி அன்பு என்பவர் தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அன்பு குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கைதான கோபி வீட்டில் இருந்து போலி மதுபானம் 210 லிட்டர், பாண்டிச்சேரி மாநில மதுபானம் 220 லிட்டர், ஹரியானா மாநில மதுபானம் 19 லிட்டர், 5000 காலி மதுபான பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்கப்பயன்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)