ஸ்கூலில் Cool Lip.. போதைக்கு அடிமையான அரசுப் பள்ளி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத மாநகராட்சி!

போதைப் பொருட்கள் புழக்கம், குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, சுத்தமில்லா கழிவறை என மாணவர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறது சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி.

Aug 23, 2024 - 21:47
Aug 24, 2024 - 10:01
 0
ஸ்கூலில் Cool Lip.. போதைக்கு அடிமையான அரசுப் பள்ளி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத மாநகராட்சி!

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 375 மாணவ , மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மொத்தம் 16 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதும், பள்ளி வளாகத்திலேயே போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் சகஜமாகியுள்ளது. பள்ளி மைதானத்தில் கூல்லிப் எனப்படுகின்ற போதை வஸ்து ஆங்காங்கே இருப்பதோடு, பள்ளி வளாகத்திற்குள் மது பாட்டில்களும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை மாதவியிடம் கேட்டபோது, ஆயிரம் விளக்கில்  இருக்கக்கூடிய சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்புடன், இந்தப் பள்ளியின் பொறுப்பும் கூடுதலாக தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பிறகு, இந்தப் பள்ளிக்கு அவர் வந்து 50 நாட்கள் ஆனதாகவும், மாணவர்களின் நடவடிக்கைகளை பார்க்கின்ற போது கவலை அளிப்பதாகவும், இதன் காரணமாக ஆயிரம் விளக்கு பள்ளிக்கு செல்வதை விட, இதே பள்ளியில் தொடர்ந்து முழு நேரமும் பள்ளி வளாகத்திலேயே இருப்பதாகவும் கூறினார். 

பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லாமல் தண்ணீர் கேன் விலைக்கு வாங்கி வருவதோடு, கழிவறை இன்னும் கூடுதலாக பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. 

மாநகராட்சி பள்ளியின் நிலை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் கேட்டபோது, வடசென்னை பகுதியில் சில பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும்,  அந்தப் பள்ளிகளை சீரமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். 

இளைஞர்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம் எனும்போது நம் நாட்டின் எதிர்காலம் நம் கண்முன்னே போதைக்கு அடிமையாகி பள்ளி வளாகத்திலேயே சீரழிவது என்பது தமிழ்நாட்டின் கல்விச் சூழலை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும், அங்குள்ள மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow