தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் கிடையாது.. பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு - தமிழக அரசு

தமிழ்நாடு அரசு ஊழியர்களில் 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகின்றனர்.

Sep 13, 2024 - 09:58
 0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் கிடையாது.. பணிக்கொடை  ரூ.25 லட்சமாக உயர்வு - தமிழக அரசு
government employees gratuity increased rs 25 lakh

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு காலம் மற்றும் இறப்புக்கு பின் வழங்கப்படும் பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் நேற்று அதிகாரப்பூர்வாக வெளியிட்டுள்ள விரிவான அரசாணையில், தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி, ஓய்வு கால பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை ஆகியவை, 2016 ஜனவரி 1ம் தேதி கணக்கிட்டு, ரூ..10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியது.

அதிகபட்ச பணிக்கொடை தொகையில் இருந்து 25 சதவீதம் அதாவது ரூ.20 லட்சத்துக்கு ரூ.5 லட்சம் என்ற அளவில், அகவிலைப்படியின் அளவு 50 சதவீதத்தை தாண்டும்போது பணிக்கொடை உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒன்றிய அரசு அனுப்பிய கடிதத்தில், இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல், 7வது சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி, ஓய்வு கால பணிக்கொடை மற்றும் இறப்பு கால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனால் தமிழக அரசும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவெடுத்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும், இதன் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர், தகுந்த உத்தரவுகளை கருவூல அதிகாரிகள், சார் கருவூல அதிகாரிகள், ஓய்வூதிய வழங்கல் அதிகாரிகளுக்கு வழங்கி, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் உத்தரவின் மூலம் ஏராளமான ஓய்வு அலுவலர்கள் பயன் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது.

மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுவோர் அனைவருக்கும் அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சாராசரி ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும். குறைந்தது பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.ஓய்வூதியர்கள் உயிரிழந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது வாழ்விணையருக்கு வழங்கப்படும். அதே நேரத்தில் பணியாளர்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. 

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போதிலும் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு காலம் மற்றும் இறப்புக்கு பின் வழங்கப்படும் பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow