ஃபெஞ்சல் புயல்.. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள் உள்ளிட்ட புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பலத்த ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் பக்கத்தில் வெளியான பதிவில், இன்று (நவ.29) மாலை முதல் நாளை (நவ.30) வரை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனம் நிறுத்த வேண்டாம் எனவும், சென்னை பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ பார்க்கிங்கை பயன்படுத்த வேண்டாம் என மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
மேலும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?