தமிழ்நாடு

சவுதிக்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணன்.. இன்டர்போல் உதவியை நாடும் தமிழக போலீஸார்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சவுதி அரேபியாவிற்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணனை பிடிப்பதற்காக சர்வதேச போலீஸாரி உதவியை தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதிக்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணன்.. இன்டர்போல் உதவியை நாடும் தமிழக போலீஸார்..
மொட்டை கிருஷ்ணனை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  படுகொலை (Armstrong Murder) தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, இறுதியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என மொத்தம் 24 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைப் பின்ணணியில் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் சொல்லப்படுவதற்கு காவல்துறை தரப்பில் தென்னரசு கொலையை சுட்டிக் காட்டி கூறுகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் பாம் சரவணனின் சகோதரருமான தென்னரசு என்பவரைக் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே வைத்து அவரது குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் வைத்து தென்னரசு கொலைக்கு ஒரு கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியான ஒற்றைக்கண் ஜெயபால் தலைமையிலான இந்த கூலிப்படைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் நிதியுதவி அளித்தாக ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் நம்பி வந்தனர். இந்நிலையில், கணவர் கொலைக்கு பழிக்கு பழிவாங்க மைத்துனர் பொன்னை பாலு உடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டினாரா? என ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் கிருஷ்ணன் என்ற மொட்டை கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் அடிக்கடி போனில் பேசியதாக, பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியனர். வழக்கு ஒன்றிற்காக வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் செல்போனில் பேசியதாக மோனிஷா போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது. தாய்லாந்திற்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.

சம்போ செந்தில் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கர்பூரில் 10 நாட்கள் தங்கியிருந்த கிருஷ்ணனை பிடிக்க தூதரக உதவியை நாடிய நிலையில் துபாய் தப்பியோட்டவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சவுதி அரேபியாவில் நண்பர்கள் உதவியோடு தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்டர்போல் உதவியை நாட உள்ளனர்.

மேலும், சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மொட்டை கிருஷ்ணன் மூலமாகவே அனைவரையும் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. சம்போ செந்தில், கிருஷ்ணன் மூலமாக ஹரிஹரன் உள்ளிட்டோர் மூலமாக மற்றவர்களை ஒன்றிணைத்தும் தெரியவந்துள்ளது.