ஆண்கள் உரிமைத் தொகை.. பல்டி அடித்த அமைச்சர் பெரிய கருப்பன்..

ஆண்கள் உரிமைத் தொகை குறித்து தான் பேசியதை திரித்து வெளியிட்டுள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Aug 10, 2024 - 18:10
Aug 10, 2024 - 18:17
 0
ஆண்கள் உரிமைத் தொகை.. பல்டி அடித்த அமைச்சர் பெரிய கருப்பன்..
அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரிய கருப்பன், “காரைக்குடியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என நான் கூறியதாக ஊடகங்களில் திரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்” என மறுப்பு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆண்களும் பெண்களும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமமாக வாழ வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி என்றவர், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக எப்போது பொறுப்பு ஏற்பார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது” என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, காரைக்குடியில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற கல்லூரியில் சேர்ந்துள்ள 600 மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் காண ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கலந்து கொண்டார். 

அதன் பின்பு விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், “மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தியது போல ஆண்கள் உரிமை தொகை திட்டம் எதிர்காலத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஆண்களுக்கும் உரிமை தொகை வழங்குவது குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறியது குறித்து அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறுகையில், “தேர்தல் நேரங்களில் என்ன வேண்டும் என்றாலும் அறிவிக்கலாம்.? ஆண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது எந்த அடிப்படையில்.? என்ன கண்டிஷன் என்பதை முதலே சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொடுத்தார்கள் 2.20 கோடி கார்டுகள் இருக்கும் இடத்தில் 1.1 கோடி ரேஷன் கார்டு பெண்களுக்கு தான் கொடுத்தார்கள் அப்படியே ஆண்களுக்கு உரிமை தொகை கொடுப்பதாக அறிவித்தாலும் கூட எவ்வளவு கடன் வாங்க போகிறார்கள் அதிமுகவை கேலி பண்ண இந்த அரசு அதைவிட பல மடங்கு கடன் வாங்கி உள்ளது. வருமானத்தை காட்டாமல் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏமாற்று வேலை” என்று தெரிவித்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow