வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Aug 11, 2024 - 00:39
 0
வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?
PM Modi In Wayanad

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கட்டடங்கள், அங்கு இருந்த பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டு தூக்கத்திலேயே உயிரை பறிகொடுத்தனர். 

மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். மேலும் 150க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம், காவல் துறையினர் என 1,500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10ம் தேதி) வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை இன்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியை பார்வையிட்டனர். பிரதமருடன் ஹெலிகாப்டரில் இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார்.

இதனைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை ராணுவ அதிகாரிகள் பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அப்போது பாஜக எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபி உடன் இருந்தார். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்தும் பிரதமர் ஆறுதல் கூறினார்.இதன்பின்பு பிரதமர் மோடி, வயநாடு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் தலையில் கைவைத்து அவர் ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்புடுத்தியது. இதன்பிறகு பிரதமர் மோடி, வயநாடு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான், சுரேஷ் கோபி எம்.பி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறுகையில், ''வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட அன்று முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தேன். தேசிய, மாநில பேரிடர் படையினர், ராணுவ வீரர்கள், டாக்டர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிலச்சரிவில் குடும்பங்களை இழந்தவர்கள் தனியாக இல்லை என்பதை நான் உறுதி அளிக்கிறேன். நாம் அனைவரும் அவர்களுடன் உள்ளோம். இந்த நேரத்தில் கேரள அரசுக்கு உறுதுணையாக மத்திய அரசு இருக்கும். வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி மற்றும் மறுகட்டமைப்பு பணிகளுக்கு பணம் ஒரு தடையாக இருக்காது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். இதேபோல் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தேன். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு செய்யவும், வீடுகள், பள்ளி கட்டுமானம் என அனைத்து பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு உதவி செய்யும் என்று உறுதி அளிக்கிறேன்'' என்று தெரிவித்தார். 

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி நிதி உதவி வேண்டும் என கேரள அரசு மத்திய அரசிடம் கேட்டு இருந்தது. ஆனால் பிரதமர் மோடி அது குறித்து ஏதும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow