கும்பமேளாவில் திடீர் தீ விபத்து.. சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக பெரிய ஆன்மிகம் மற்றும் கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா ஒவ்வொரு ஆண்டும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும். இந்த கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார். இவர் நிரஞ்சனி அகாராவின் மகா மண்டலேஷ்வர் சுவாமி கைலாஷ் ஆனந்த் மகராஜ் முகாமில் 40 பேருடன் தங்கினார். இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் லாரன் பாவெல் 15-ஆம் தேதி வரை முகாமில் தங்கி இருந்து கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
லாரன் பாவெல், பிரயாக்ராஜ் வருவதற்கு முன்பு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கருவறையில் அனுமதிக்கப்படாத நிலையில் கருவறையின் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கமளித்து சுவாமி கைலாஷ் ஆனந்த், இந்துக்களை தவிர மற்ற மதத்தினர் சிவலிங்கத்தை தொடுவதற்கு அனுமதி இல்லை என்பதால் லாரன் பாவெல் கருவறையின் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்தார். இந்த பாரம்பரியத்தை நான் கடைப்பிடிக்கவில்லை என்றால் இந்த மரபு முறிந்து விடும் என்று கூறினார்.
இந்நிலையில், கும்பமேளாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதாவது, பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீப்பற்றியது. இதனால், 20-க்கும் மேற்பட்ட கூடாரங்களில் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்ட நிலையில் அவரிடம் தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
What's Your Reaction?