வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

Jul 8, 2024 - 11:43
Jul 8, 2024 - 13:02
 0
வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
ராகுல் காந்தி

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டிய மழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தலைநகர் திஸ்பூர், பார்பெட்டா உள்பட 29 மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன.

அசாமில் உள்ள பிரம்மமுத்திரா, பராக் ஆகிய நதிகளை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் மூழ்கடித்துள்ளது. மேலும் பல பகுதிகளில் சாலைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோக மையங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. கனமழை-வெள்ளத்தால் 29 மாவட்டங்களில் மொத்தம்  23,96,648 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 68,768.5 ஹெக்டேர் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். 

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 577 நிவாரண முகாம்களில் 53,429 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. 

மேலும் வெள்ளம் காரணமாக ஆடு, மாடுகள் உள்பட 114 வாயில்லா ஜீவன்கள் உயிரை இழந்துள்ளன. அசாம் முழுவதும் 126 சாலைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. 2 முக்கியமான பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. 

அசாமில் தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார். இதற்கு முன்பாக இன்று காலை அசாம் மாநிலத்துக்கு சென்ற அவர் லக்கிபூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிவாரண முகாம்களில் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். அப்போது அசாம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து, ''அசாம் வெள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்'' என கோரிக்கை மனு அளித்தனர். 

''ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஆனால் அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் மோடி மக்களை பார்க்காமல் ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்'' என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow