துரைமுருகனை, ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார்?.. மேடையில் தெறிக்க விட்ட ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த அமைச்சர்கள்!

''அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன்'' என்று ரஜினிகாந்த் கூறினார்.

Aug 24, 2024 - 19:10
Aug 25, 2024 - 09:33
 0
துரைமுருகனை,  ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார்?.. மேடையில் தெறிக்க விட்ட ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த அமைச்சர்கள்!
Actor Rajinikanth And MK Stalin

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெருமையை பறைசாற்றும் வகையில், 'கலைஞர் எனும் தாய்' என்னும் நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், காந்தி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன்,மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ்,மஸ்தான்,மெய்யநாதன், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, துரை வைகோ மற்றும் கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.  அமைச்சர் எ. வ. வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''அமைச்சர் எ.வே.வேலு கலைஞரின் அன்பு தம்பி. திருவண்ணாமலையின் அடையாளமாக திகழும் எ.வே.வேலு எழுத்திலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார். 

கலைஞரை தாயோடு ஒப்பிட்டு எழுதியுள்ள எ.வே.வேலு சொற்களால் கோட்டை எழுப்பி உள்ளார். ஏற்கெனவே கலைஞரின் நூல் நாட்டுமையாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார். 

இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ''அரசியலில் நுழைந்து கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு மக்கள் மத்தியில் தொண்டர்கள் மத்தியில் புகழ், பெயர் எடுத்து தனக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர் அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின். 

அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன். உலகத்திலேயே எந்த ஒரு அரசியல் தலைவருக்கு இப்படி ஒரு நூற்றாண்டு விழாவை கொண்டாட மாட்டார்கள். இனியும் கொண்டாடப்போவதில்லை.  

கலைஞர் என்று சொன்னால் சினிமா, இலக்கியம், அரசியல் என அனைத்தையும் சொல்லலாம். சினிமாவில் கலைஞர் குறித்து நான் அதிகம் பேசி இருக்கிறேன். இலக்கியம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. இப்போது அரசியல் குறித்து எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக் கூடாது என்பதை குறித்து திட்டமிட்டு வந்தேன். அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு திமுக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதற்கு ஸ்டாலினின் ஆளுமை, அரசியல் ஞானம் தான் முக்கியமான காரணமாகும்'' என்றார்.

தொடந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம் (நான் முன்வரிசை அமைச்சர்களை பார்த்து சொல்லவில்லை). ஆனால் ஸ்டாலின் அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு.  அவர் பேசுறது ஒன்னுமே புரியது. ஆனால் ஸ்டாலின் சார் Hats off to You'' என்று ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினிகாந்த் இப்படி பேசும்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் துரைமுருகன் மட்டுமின்றி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட விழாவில் பங்கேற்ற அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow