'இதுதான் தமிழ்நாடு'.. வைகோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தம்பிதுரை.. தமிமுன் அன்சாரி பாராட்டு!
''வைகோ பேசுவதற்கு நீங்கள் கூடுதல் நேரம் கொடுக்கவில்லை. ஆனால் ராம்கோபால் யாதவை எந்த அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்தீர்கள்?'' என்று மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கை நோக்கி தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,3 நாட்களுக்கு முன்கூட்டியே, அதாவது நேற்றுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பட்டது குறித்தும் எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் ஆவேசமாக பேசினார்கள். இதேபோல் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது குறித்தும், நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறித்தும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பேசினார்கள்.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், மதிமுக எம்.பி.யுமான வைகோ கர்ஜித்தார். அப்போது பேசிய வைகோ, ''தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், தொடர்ச்சியாக தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும் வருகின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது தங்கள்பிடியில் இருந்த தமிழக மீனவர்களிடம், 'இந்த போட்டியில் இலங்கை தோற்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள்' என்று, இலங்கை கடற்படையினர் எச்சரித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்த போட்டியில் இலங்கை தோற்கடிக்கப்பட்டதும், அன்று இரவு 4 மீனவர்கள் தாக்கப்பட்டு, அவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டு, உடல்கள் கடலில் வீசப்பட்டன.
கடந்த பல ஆண்டுகளாகவே ஏராளமான தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம் கூட, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, ஒரு மீனவர் தாக்கப்பட்டு, கடலில் மூழ்கடிக்கப்பட்டார். இன்னொரு மீனவரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை'' என்று வைகோ ஆவேசமாக பேசியபோது அவரது நேரம் முடிந்து விட்டதால் மைக் துண்டிக்கப்பட்டது.
வைகோவுக்கு அடுத்தபடியாக சமாஜ்வாடி கட்சியின் மூத்த எம்.பி., ராம்கோபால் யாதவை பேசும்படி மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் அழைத்தார். மைக் அணைக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து பேசிய வைகோ, ''நான் இந்த விஷயத்தை பேசுவதற்காகவே மருத்துவமனையில் இருந்து நேராக நாடாளுமன்றம் வந்துள்ளேன். எனக்கு கூடுதலாக சில நிமிடங்கள் கொடுத்தால் குறைந்து விடுவீர்களா?'' என்று ஆதங்கத்தை கொட்டினார்.
அதே வேளையில் வைகோவுக்கு அடுத்ததாக பேசிய சமாஜ்வாடி கட்சியின் எம்.பி ராம்கோபால் யாதவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்தபிறகும் கூடுதல் நேரம் பேச அனுமதிக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அதிமுக எம்.பி தம்பிதுரை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கை நோக்கி, ''வைகோ பேசுவதற்கு நீங்கள் கூடுதல் நேரம் கொடுக்கவில்லை. ஆனால் ராம்கோபால் யாதவை எந்த அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்தீர்கள்?
வைகோ உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறார். அவருக்கு கருணை காட்ட மறுத்தது ஏன்? மீனவர்களின் உரிமை குறித்து பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா?'' என்று கோபத்துடன் கூறினார். தமிழ்நாட்டில் வைகோவின் மதிமுகவும், தம்பிதுரையின் அதிமுகவும் நேர் எதிர் கூட்டணியில் உள்ளன. அப்படி இருந்தும் தம்பிதுரை வைகோவுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
''தமிழ்நாட்டில் நங்கள் எங்களுக்குள் சண்டையிட்டு கொள்வோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும்போது ஒருவருக்கு ஒருவர் ஆதரவுடன் இருப்போம். இதுதான் தமிழ்நாடு'' என்று இந்த சம்பவத்தை வைத்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வைகோவுக்கு குரல் கொடுத்த தம்பிதுரையை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட தமிமுன் அன்சாரி, ''கடந்த வாரம் மாநிலங்களவையில் தமிழ்நாட்டு நலனுக்காக வைகோ பேசும்போது உரிய நேரம் ஒதுக்கப்படவில்லை. வட இந்திய MP ஒருவருக்கு கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிமுக MP தம்பிதுரை, வைகோவுக்கு ஏன் கூடுதல் நேரம் தரவில்லை? என கேட்டிருக்கிறார். ஆரோக்கியமான இப்போக்கை வரவேற்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?






