ஸ்டாலின் கட்டுப்பாட்டில் யாரும் இல்லை.. குழப்பத்தில் திமுக தலைவர்கள்.. ராஜன் செல்லப்பா தாக்கு
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் எந்த அமைச்சர்களும் இல்லை என்பதற்கு தெளிவாக தெரிகிறது. கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற குழப்பத்தில் தான் திமுக தலைவர்களும் உள்ளனர் என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, “முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் எந்த அமைச்சர்களும் இல்லை என்பதற்கு தெளிவாக தெரிகிறது. இந்த அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது? இந்த கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற குழப்பத்தில் தான் திமுக தலைவர்களும் உள்ளனர். உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதை விட அக்கட்சியில் நிறைய அனுபவமிக்கவர்கள் உள்ளனர். ஒருவர் அந்த பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே அது வளர்ச்சி அல்ல.
தற்போது இந்த கார் பந்தயம் அவசியமா? என அதிமுகவும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்புகின்றனர்! அதன் விளைவாக எத்தனை விபத்துகள் வந்தாலும் திமுக அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் நடக்கிறது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதற்காக தொழில் அதிபர்களிடம் பணம் பெறுவதாகவும், தொடர்ந்து செய்தி வருகிறது. இந்த கார் பந்தயம் நிச்சயமாக நடக்காது. அதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நடப்பதற்கு வாய்ப்பில்லை நடந்தாலும் மக்களுக்கு பயனில்லை என்றார்.
ஆண்களுக்கும் உரிமை தொகை வழங்குவது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறியது குறித்த கேள்விக்கு, “தேர்தல் நேரங்களில் என்ன வேண்டும் என்றாலும் அறிவிக்கலாம்? ஆண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது எந்த அடிப்படையில், என்ன நிபந்தனை என்பதை முதலே சொல்ல வேண்டும். பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொடுத்தார்கள். 2.20 கோடி கார்டுகள் இருக்கும் இடத்தில் 1.1 கோடி ரேஷன் கார்டு பெண்களுக்கு தான் கொடுத்தார்கள். அப்படியே ஆண்களுக்கு உரிமை தொகை கொடுப்பதாக அறிவித்தாலும் கூட, எவ்வளவு கடன் வாங்க போகிறார்கள்? அதிமுகவை கேலி செய்த இந்த அரசு அதைவிட பல மடங்கு கடன் வாங்கி உள்ளது. வருமானத்தை காட்டாமல் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏமாற்று வேலை” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “மாமதுரை நிகழ்ச்சி மக்களால் நடத்தப்பட வேண்டும் மன்னர்களால் நடத்தப்படுகிற நிகழ்ச்சியாக தான் இருக்கிறது. 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற மாமதுரை நிகழ்ச்சி, உலகம் முழுவதும் தெரியப்படும் அளவிற்கு மிகச் சிறப்பாக நடந்தது. இன்றைக்கு நடக்கிற நிகழ்ச்சியில் முதல்வர் வாழ்த்து தெரிவித்தாரே, தவிர இது மக்கள் நிகழ்ச்சியாக தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு நலத்திட்டங்கள் மதுரைக்கு வழங்கப்பட்டது. மதுரையில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் சிறப்பாக இருக்கும் என்பார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி மதுரையின் சிறப்பை குறைக்கிற நிகழ்ச்சியாக உள்ளது.
காவலர்கள் முறையாக வாகனம் நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இது நிர்வாக சீர்கேடு. மதுரை மாவட்டம் முழுவதும் தினந்தோறும் எல்லோருக்கும் அபராதம் போடுகிறார்கள். காவல்துறையினர் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் எங்கு பார்த்தாலும் காவலர்களுக்கு எதிராக, அரசுக்கு எதிராக மாறிவிட்டார்கள். சின்ன விஷயங்களுக்கு கூட அபராதம் விதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
காவல்துறை இதில் கனிவாக செயல்பட வேண்டும் கொஞ்சம் வேகமாக செயல்பட்டால் அவர்களுக்கே அது ஆபத்தாக முடிந்துவிடும். தமிழ்நாடு முழுவதும் காவல்துறை தனது அளவை மீறி செயல்படுவதால் அவர்கள் பதவியை விட்டு நீக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நிகழ்ச்சி என்றால் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும் திட்டமிடாமல் நடத்தப்படுவது தான் மாமதுரை நிகழ்ச்சி” என்றார்.
What's Your Reaction?