தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டார். அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு அக்டோபரில் அவரது நெருங்கிய நண்பரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட லேடி வெலிங்டன் பள்ளியில் தனது முதல் ஆய்வைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ‘தொகுதிக்கு ஒரு பள்ளி’ என்கின்ற அடிப்படையில் ஆய்வை தொடங்கி 234 தொகுதிகளில் தற்போது ஆய்வை நிறைவு செய்துள்ளார். இறுதியாக இன்று (நவ. 14) முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி ஜி கே எம் காலனியில் உள்ள அரசுப் பள்ளியில் தனது ஆய்வை நிறைவு செய்துள்ளார்.
கடந்த ஓராண்டாக அமைச்சர் அன்பில் மகேஷ், 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கான உரிய பலன் கிடைக்குமா என்கிற கேள்வியை ஆசிரியர் சங்கங்களை சார்ந்தவர்களும் ஆசிரியர்களும் எழுப்புகின்றனர். இதுகுறித்து பேசிய ஆசிரியர் சங்கம், “அமைச்சர் அன்பில் மகேஷின் ஆய்வு துறை சார்ந்த பிரச்சனைகளுக்கோ அல்லது பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கோ இதுவரை உடனடி தீர்வு கண்டதாகவே இல்லை என்பதே அமைச்சரின் ஆய்வு மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அத்தொகுதியின் தலைமையிடத்தில் மட்டுமே அமைச்சரின் பெரும்பான்மையான ஆய்வுகள் அமைந்திருந்தது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என சுமார் 50 பள்ளிகள் இருக்கும். அதில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளையோ, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய அரசு பள்ளிகளையோ அமைச்சர் கண்டறிந்து அந்தப் பள்ளிகளுக்கு மட்டும் குறிப்பாக ஆய்வுக்கு சென்றிருந்தால் அங்குள்ள நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டறிந்து தீர்த்திருக்க முடியும்” என வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக பேசிய அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அண்ணாமலை, “தமிழகத்தில் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஏற்கனவே ஆசிரியர்களை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. திமுக அரசு பொறுப்பேற்றது முதலே அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து நிலுவையில்தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது. எனவே அமைச்சர் அன்பில் மகேஷ் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதாகக் கூறுவதை ஒரு விளம்பரமாகவே கருத வேண்டி இருக்கிறது. மேலும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று தொகுதிக்கு ஒரு பள்ளியை ஆய்வு செய்த முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற பெயரையும் , அங்கு ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் சகஜமாக அமைச்சர் பழகினார் என்கிற பெயரும் மட்டுமே அமைச்சருக்கு இந்த ஆய்வு பெற்று தரும்” என விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஓர் ஆண்டு காலம் ஆய்வை மேற்கொண்ட அமைச்சர் அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இருக்கக்கூடிய மீதமுள்ள ஓராண்டு காலத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை விரைந்து முன்னெடுத்தால் அது பள்ளிக்கல்வித்துறைக்கு நன்மை பயக்கும் என்பதே அனைவரும் கருத்தாக உள்ளதாகவும் தெரிவித்தார்.