'மேகதாது அணை கட்டுவது உறுதி'.. சென்னையில் முழங்கிய டி.கே.சிவக்குமார்.. தமிழக அரசின் பதில் என்ன?

காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது

Sep 3, 2024 - 12:42
Sep 4, 2024 - 10:10
 0
'மேகதாது அணை கட்டுவது உறுதி'.. சென்னையில் முழங்கிய டி.கே.சிவக்குமார்.. தமிழக அரசின் பதில் என்ன?
DK Shivakumar

சென்னை: காவிரியின் குறுக்கே 'மேகதாது' என்ற இடத்தில் புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் பெறுவது பெரும்பாடாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டினால் அந்த குறைந்த தண்ணீரும் தமிழ்நாட்டுக்கு வராமல் கிட்டத்தட்ட டெல்டா மாவட்டங்களே பாலைவனமாகி விடும். இதன் காரணமாக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்று தமிழ்நாடு அரசும், விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாடு அரசுக்கு செவிசாய்க்காத கர்நாடகம், மேகதாது அணை கட்டுவதில் பிடிவாதமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கோரி கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் டி.ஆர்.பாட்டிலை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்.

அதே வேளையில் கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்ட ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன் ஆகியோர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் செய்லபடுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை டி.கே.சிவக்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த டி.கே.சிவக்குமார், ''மேகதாது விவகாரம் தொடர்பாக நான் தற்போது விவாதிக்க விரும்பவில்லை. ஆனாலும் மேகதாது அணை கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. தற்போது கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்துள்ளது. இரண்டு மாநிலங்களுக்கும் மழை உதவும் என நம்புவோம்'' என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அதுவும் தலைநகர் சென்னையில் வைத்து 'மேகதாது அணை கட்டப்படும்' என்று  டி.கே.சிவக்குமார் கூறியுள்ளது, அந்த மாநில அரசு அதில் உறுதியாக உள்ளதை காட்டுகிறது. டி.கே.சிவக்குமாரின் பேச்சால் தமிழ்நாடு விவசாயிகள் கொதிப்பில் உள்ளனர். மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

இதேபோல் தமிழ்நாட்டிலும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டமும் நடந்துள்ளது. இப்போது சென்னையில் வைத்தே மேகதாது அணை கட்டப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளதால், அடுத்து தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது? கர்நாடக துணை முதல்வருக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் பதில் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow