டென்ஷன் எங்களுக்கு இல்லை; அவர்களுக்கு தான் - அமைச்சர் சேகர் பாபு பதிலடி
தாமரை எங்காவது மலர்ந்தால் தானே நான் டென்ஷனாக வேண்டும் என்றும் பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பந்தக்காலை ஊன்றினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “8 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைத்து அடிப்படை வசதிகளும் எப்படி இருந்தது என நிகழ்ச்சி முடிந்ததும் துறை அமைச்சர் நானே விசாரித்தேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மேலும் சிறப்பான வசதியை செய்து கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்தனர். முதல்வருக்கும் நன்றி தெரிவித்தது என்னால் கேட்க முடிந்தது. இப்படியான மகிழ்ச்சி மக்கள் இடத்தில் இருப்பது எங்கள் பணிகளை சிறப்பாக்கும்.
சிலை திருட்டு என்பது வெகுவாக குறைந்துள்ளது. 28 கோடி ரூபாய் சிலை கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டதுள்ளது. முதலமைச்சர் தனியாக ஆய்வு கூட்டத்தை நடத்தி விலை மதிப்புடைய சிலைகளுக்கு க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டு காணாமல் போனால் அந்த சிலைகள் எங்கு இருக்கிறது என்பதை, கண்டுபிடித்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
தாமரை எங்கையாவது மலர்ந்தால் சேகர்பாபுவிற்கு கோபம் வருகிறது என்ற தமிழிசை கேள்விக்கு பதிலளித்த அவர், “பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் கூண்டோடு ஓரம் கட்டி விட்டோம். எங்களுக்கு டென்ஷன் இல்லை. நாலு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த திமுக எட்டு காலு பாய்ச்சலோடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், மாவட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் குறைகளையும் மக்கள் தேவைகள் நேரடியாக சந்தித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 என்ற இலக்கை நோக்கி திமுக பயணத்தைக் மேற்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு டென்ஷன் அல்ல எங்களுக்கு எதிர்த்து களத்தில் இருப்பவர்கள் தான் டென்ஷன்” என்றார்.
மேலும் கூறிய அவர், ‘சிதம்பரம் கோவிலை பொறுத்தவரைக்கும் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் கேட்டு மேற்கொள்ள இருக்கிறோம். திருக்கோவிலில் பொருத்தவரைக்கும் சட்டங்கள் என்ன சொல்கிறது? எந்த திருக்கோவிலாக இருந்தாலும் புகார் பெறப்பட்டால் அதன் மீது விசாரணை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு முழு அதிகாரம் இருக்கிறது.
கனகசபை வருகின்ற மக்களை தடுத்து நிறுத்துவதன் காரணமாக, இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை எதிர்த்து, ஏற்கனவே தடை செய்யக்கூடாது என உத்தரவு பெறப்பட்டது. தீச்சர்களோடு போராட வேண்டிய அவசியம் இல்லை.
பக்தர்களுக்கு அவமரியாதையும், தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றாத சூழ்நிலையில், நிச்சயம் அரசு தலையிட்டால் நீதிமன்றமும் வரவேற்கும். திருக்கோவில் என்பது பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக தான் ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட தரிசனம் செய்வதற்கு அல்ல. பொதுமக்களுக்கு கேடு விளைவிக்குமானால், பொதுமக்களின் தரிசனத்தில் இடர்பாடுகள் ஏற்பட்டால் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்கும்’ என்று தெரிவித்தார்.
What's Your Reaction?