"பதவியல்ல.. பொறுப்பு.. " - துணை முதலமைச்சராவது குறித்து உதயநிதி கருத்து

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 29, 2024 - 07:24
 0
"பதவியல்ல.. பொறுப்பு.. " - துணை முதலமைச்சராவது குறித்து உதயநிதி கருத்து
துணை முதலமைச்சராவது குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. 

அதன்பிறகு சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த 24-ம் தேதி சென்னை கொளத்தூரில் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது எனத் தெரிவித்தார்.

அந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில், உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே உதயநிதியின் கைவசமுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையுடன், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறையும் கூடுதலாக வழங்கப்படுகிறது. பதவியேற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு எனக் கூறியுள்ளார். அதனை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow