வக்பு வாரிய திருத்தச் சட்டம்... தமிழக அரசு எதிர்ப்பது ஏன்?... இஸ்லாமியர்களுக்கு என்ன பாதிப்பு?
மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக, தமிழக அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவால் இஸ்லாமியர்களுக்கு என்ன பாதிப்பு, மத்திய அரசின் உண்மையான நோக்கம் என்ன? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

வக்ஃப் வாரியம் என்ற இந்த சொல் தான், இந்திய அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இதுநாள் வரை இஸ்லாமியர்களின் வசம் உள்ள வக்ஃபு வாரியம், இனிமேல் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லவிருப்பது தான் இந்தப் பரபரப்புக்கு காரணமாகும். இதற்காக மத்திய அரசு வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமே வக்பு வாரிய திருத்தங்களை கொண்டு வருவதற்கான முன் வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த முன்வரைவானது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அங்கு நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதிக்கப்படவில்லை. அவர்களது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரையும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான், அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ள வக்பு வாரிய மசோதாவுக்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
வக்பு சட்டமானது முதலில் 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, அதன்பின்னர் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனாலும் அப்போதெல்லாம் இல்லாத பரபரப்பு, தற்போது மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்படும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஏற்பட்டுள்ளது. வக்பு வாரியம் என்பது, இஸ்லாமியர்களால் தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும். அதாவது, எந்தவொரு இஸ்லாமியரும் தன்னிடம் உள்ள அசையும் அல்லது அசையா சொத்துகளை, தர்மமாக கொடுக்க முன்வரும் போது, அதனை வக்பு என்ற பெயரில் பாத்தியம் செய்துவிடுவார்கள். அதேபோல், வாரிசு இல்லாதவர்களும் அவர்களது சொத்துகளை வக்பு வாரியத்துக்கு எழுதி கொடுப்பது வழக்கம். அதன்படி இந்த சொத்துகள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி வாசல்கள் அல்லது ஜமாத்துகளின் கீழ் வக்பு வாரியத்துக்கு சொந்தமாகிவிடும்.
இப்படியாக இந்தியா முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில், சுமார் 8 லட்சத்துக்கு 70 ஆயிரம் சொத்துக்களை வக்பு வாரியம் மேற்பார்வையிடுகிறது, இதன் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இந்த சொத்துகள் அனைத்தையும் வக்பு வாரியத்தில் நிர்வாகிகளாக உள்ள இஸ்லாமியர்கள் கண்காணித்து வருகின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வக்பு வாரியமும் அதன் சொத்துகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, அந்தந்தப் பகுதி இஸ்லாமியர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன. அதேபோல், வக்பு வாரியங்கள் மாநில அரசுகளின் மேற்பார்வையில் செயல்படுகின்றன.
ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டுவரவுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியங்களின் சுயாட்சியை பாதிக்கும். அதேபோல், வக்பு நிலங்களை அளவீடு செய்யும் அதிகாரத்தை, நில அளவை அதிகாரியிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்படுகிறது. மேலும், வக்பு நிலங்கள் குறித்து முடிவு செய்யும் அதிகாரங்கள், வக்பு வாரியங்களிடம் இருந்து நீக்கப்படும். அதன்படி இனிமேல் வக்பு வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நிர்வாகிகளாக நியமித்து, அனைத்தும் அவர்களது அதிகாரத்திற்கு கொண்டு வரப்படும். இதனால், மாநில வக்பு வாரியத்திற்கான உறுப்பினர்கள் தலைவருக்கான தேர்தல் ரத்து செய்யப்படவுள்ளது. முக்கியமாக இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சமூகத்தினர், வக்பு வாரியத்துக்கு தானமாக கொடுத்த சொத்துகளை செல்லாததாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது இஸ்லாமியர்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், வக்பு சொத்துகளை பதிவு செய்யும் முன், மாவட்ட ஆட்சியர் சரிபார்க்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலமாக வக்பு சொத்துகளை மத்திய அரசு கைப்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதோடு, மத உரிமையை பாதிப்பதாகவும் இருப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அதாவது, மொத்தமாக 33 புதிய உள்ளீடுகள், 45 மாற்றங்கள், 37 நீக்கப்பட்ட விதிகள் என இதில் ஒட்டுமொத்தமாக 115 திருத்தங்கள் இருக்கின்றன. இத்தனை திருத்தங்கள் மேற்கொள்வது என்பது அந்தச் சட்டத்தையே இல்லாமல் ஆக்குவதாகும். ஒட்டுமொத்தமாக வக்பு வாரியத்தை முடக்குவதற்கு இந்த சட்ட திருத்த மசோதா வழிவகுக்கும் என பலரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்..
சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புக்கு எதிரான, நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணான தேவையற்ற பிரிவுகள் வக்பு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்வதால், அவரவரது மதங்களை பின்பற்றும் உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு முயற்சி செய்வதால், அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்கட்சியான அதிமுகவும் ஆதரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும், இந்த மசோதா அமலுக்கு வருவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு தயார் செய்துவிட்டதாகவே தெரிகிறது. ஆனாலும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
What's Your Reaction?






