நமாஸ் செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.. உ.பி. போலீஸ் எச்சரிக்கை
சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மீரட் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் ரம்ஜான் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (மார்ச் 28) இஸ்லாமியர்களால் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்படுகிறது.
காவல்துறை எச்சரிக்கை
இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் காவல்துறை சாலைகளில் தொழுகை நடத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இஸ்லாமியர்கள், மசூதிகள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் தான் தொழுகை நடத்த வேண்டும் என்றும் இதை தவிர்த்து சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீரட் நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங் கூறியதாவது, “சாலைகளில் தொழுகை மேற்கொள்ளும் நபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் அவர்களது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், நீதிமன்றத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட் பெறுவது கடினமாகிவிடும்” என்று அவர் கூறினார்.
மேலும், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தடா பேசியதாவது, “சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளை பரப்புவர்கள் அல்லது அமைதியின்மையைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். முக்கிய இடங்களில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்" என்று கூறினார்.
What's Your Reaction?






