Vande Metro Train : சென்னை டூ காட்பாடி 'வந்தே மெட்ரோ' ரயில்.. அதிவேக சோதனை ஓட்டம்.. நவீன வசதி என்னென்ன?
Vande Metro Train Between Chennai To Katpadi Trail Run : சென்னை-காட்பாடி இடையே சோதனை ஓட்டத்தின்போது, வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Vande Metro Train Between Chennai To Katpadi Trail Run : 141 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ரயில் போக்குவரத்து மக்களின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களையும் இணைக்கும் பாலமாக ரயில்கள் விளங்கி வருகின்றன.
இந்தியாவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதல் பாசஞ்சர் ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஜன்சதாப்தி, ஹம்சாபர் என மிக அதிவேகமான ரயில்களும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இது தவிர 'வந்தே பாரத்' எனப்படும் அதிநவீன சொகுசு வசதிகளை கொண்ட ரயில்கள் 2019ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
நாட்டின் பெரு நகரங்களை இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை-மைசூரு, சென்னை-கோவை, சென்னை-நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு 'வந்தே பாரத்' ரயில்கள் இயங்கி வருகின்றன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக சென்று பயண நேரத்தை மிச்சப்படுத்துவதால் 'வந்தே பாரத்' ரயில்களுக்கு நல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது.
தற்போது இருக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத்' ரயில்கள் மட்டும் இயங்கி வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத்' ரயில்கள் நாட்டில் அறிமுகமாக உள்ளன. இது தவிர இந்தியாவில் 250 கி.மீ தொலைவுக்கு செல்லும் வகையில், 'வந்தே மெட்ரோ' ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் 'வந்தே மெட்ரோ' ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் 'வந்தே மெட்ரோ' ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 12 பெட்டிகள் கொண்ட முதல் 'வந்தே மெட்ரோ' ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை-காட்பாடி இடையே இன்று காலை நடந்தது.
சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், அரக்கோணம் வழியாக காட்பாடியை 11.55 மணிக்கு சென்றடைந்தது. இதேபோல் காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்ட 'வந்தே மெட்ரோ' ரயில் மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைந்தது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு உயரதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், ஐசிஎஃப் அதிகாரிகள் ஆகியோர் ரயிலில் இருந்தனர்.
இந்த சோதனை ஓட்டத்தின்போது, வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 'வந்தே மெட்ரோ' ரயில் முழுமையாக ஏசி வசதி கொண்டுள்ளது. மேலும் சொகுசு இருக்கைகள், கண்காணிப்புக் கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளன. இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






