கள்ளச்சாராய விவகாரம்.. சிபிஐக்கு மாற்றம்... தமிழக அரசுக்கு பலத்த அடி.. பாஜக விமர்சனம்!
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்த 66 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவ. 20) சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு நீதிமன்றம் குட்டு வைத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசின் காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்ட காவல்துறை, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், கள்ளச்சாராயம் தொடர்பாக, திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் மாண்புமிகு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் திமுக அரசு செயல்பட்டு வந்திருப்பது, சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்குக் குட்டு வைத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைத்திருப்ப முயன்ற திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “சாராய உயிரிழப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிசிஐடி விசாரணையை சிபிஐயக்கு மாற்றி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை பாஜக வரவேற்கிறது. உயர்நீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்கள். ஆளும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் எதிர்க்கட்சிகள் மக்களிடம் பிரச்சனையை எடுத்துச் சென்றார்கள். அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடி இன்று தீர்ப்பை பெற்றுள்ளனர்.
மாநிலத்தின் சட்ட ஒழுங்கு, கள்ள சாராய உயிரிழப்புகள் எல்லாவற்றிலும் தமிழக அரசு எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டியுள்ளது. தமிழக அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் தோல்வி அடைந்திருக்கிறது என்பது இந்த தீர்ப்பின் மூலமாகவே தெரிந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மாநில அரசு ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிபிசிஐடி வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசின் மிகப்பெரிய தோல்வி ஆகும். நன்றாக யோசித்துப் பாருங்கள். ஆளும் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தொடர்புடைய சில நபர்களை ஆளுங்கட்சியின் ஆதரவு மூலம் காவல்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இனிமேல் சிபிஐ விசாரணை மூலம் அவர்கள் வெளி வருவார்கள். சிபிஐ விசாரணையில் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது. சிபிசிஐடி சிறப்பாக செயல்பட்டு இருந்தால் மாநில அரசன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் மாநில அரசின் தோல்வியால் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?