கட்சிக் கொடி அறிமுகம், பிரேமலதாவுடன் சந்திப்பு.. ஸ்பீடு மோடில் விஜய்.. குதூகலிக்கும் ரசிகர்கள்..
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான 'தளபதி' விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, வெளியாகும் படம் என்பதால் 'கோட்' திரைப்படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதேபோல், இப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் த்ரிஷா நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அப்டேட்டையும் படக்குழு தரப்பில் இருந்து கொடுக்கவில்லை.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து 'விசில் போடு..', 'சின்ன சின்ன கண்கள்..' என இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. மூன்றாவதாக 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு.. என் முன்னால நடந்தா கேட் வால்க்-கு'' என்ற பாடலும் வெளியானது.
இதனைத் தொடர்ந்து கோட் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஆகஸ்ட் 17 அன்று மாலை ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ட்ரெய்லரை பார்க்கும்போது ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக 'கோட்' உருவாகியுள்ளது என்பது தெரிகிறது.
மேலும், இப்படத்தின் டிரைலர் வெளியாகி முதல் 24 மணி நேரத்தில் 39 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 1.65 மில்லியன் விருப்பக் குறிகள் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி கூகுள் இந்தியா ஒரு படி மேலே சென்று, ‘கோட்’ ட்ரெயிலரில் வரும் “A lion is always a lion” என்ற டயாலாக்கை மேற்கோளிட்டு ‘தளபதியின் இரட்டை சம்பவத்திற்கு தயார்’ என X தளத்தில் பதிவிட்டு இருந்தது.
இவை ஒருபுறம் இருக்க, 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார் விஜய். தொண்டர்களுடன் சந்திப்பு, அரசியல் பேச்சுக்கள் என தமிழக வெற்றிக்கழகம் முகாமில் அனல் பறக்கிறது. நடிகர் விஜய் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உட்பட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.
விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே வரும் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் ஏற்றி கொடியை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் அலுவலகத்தில், விஜய் தனது கட்சி கொடியை பறக்க விட்டுள்ளார். பவுர்ணமி தினம் மற்றும் ஆவணி அவிட்ட நாளான இன்று மஞ்சள் நிறத்திலான கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார் விஜய். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த நிலையில் அலுவலக வாசலில் கொடியை ஏற்றி பறக்க விட்டுள்ளார்.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார். கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்திக்கொள்ள பிரேமலதா விஜயகாந்த் அனுமதி அளித்திருந்தார்.
இதனால், ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய், பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது கோட் திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?