கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரை இடமாற்றமும் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடை நீக்கமும் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதில், அரசியல் தலைவர்கள், காவல்துறையினர் என பலருக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்சனக்கள், தீங்குகள் உருவாகும் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, காவல்துறையினருக்கு தெரியாமல் இச்சம்பவம் நடந்தது என்பதை ஏற்கமுடியவில்லை என்றும் மாநில போலீசார் கண்டும் காணமால் இருந்துள்ளது இச்சம்பவம் மூலம் தெளிவாக தெரிகிறது என்றும் தெரிவித்தனர்.
மேலும், காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று குறிப்பிட்ட நீதிபதி சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்ததுடன் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினர்.
What's Your Reaction?