சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் தனியார் மதுபோன விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று திங்கட்கிழமை அன்று [11-11-24] அங்கு மது அருந்த சென்ற இளைஞர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பார் வாசலிலேயை படுத்து தூங்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பார் ஊழியர்கள், வாசலில் படுத்து தூங்கிய இளைஞரை எழுப்பி விரட்டி அனுப்பி வைத்தனர். அங்கிருந்து புறப்பட்டு சென்ற இளைஞர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பாருக்கு வந்து, தான் கையில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை பார் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பெட்ரோல் குண்டு வெடித்து சிதறி பாரில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. உடனே பார் ஊழியர்கள், தீயை அணைத்ததுடன் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை விரட்டி பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருமுல்லைவாயில் சக்திவேல் நகரை சேர்ந்த விஷ்ணு (30) என்பது தெரியவந்தது. மதுபோதைக்கு அடிமையான விஷ்ணு, கடந்த இரு ஆண்டுகளாக போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.
மேலும், நேற்று இரவு பாரில் மது அருந்தி விட்டு போதையில் படுத்து தூங்கிய போது ஊழியர்கள் விரட்டி அனுப்பியதால் ஆத்திரத்தில், கடைக்கு சென்று பெட்ரோல் வாங்கி மதுபாட்டில் பெட்ரோல் ஊற்றி திரிபோட்டு பற்ற வைத்து பார் மீது வீசியது தெரிய வந்தது. பின்னர் போலீசார் விஷ்ணு மீது வழக்கு பதிவு அவரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.