ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்
ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 -ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவர் வகித்த மின்சாரத் துறை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இதையடுத்து 243 நாட்கள் வரை இலாகா இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி தொடர்ந்தார். அவருடைய ஜாமீனுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். இதையடுத்து, பல முறை ஜாமீன் மனு ரத்தான நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
தொடர்ந்து, அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்த ஓரிரு நாட்களில் தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, ஜாமின் கிடைத்த அடுத்த நாளே செந்தில் பாலாஜி அமைச்சராக பெறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது? என்றும் கேள்வி எழுப்பினார். இதுகுறித்த விளக்கத்தை பிரமாண பத்திரமாக அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
What's Your Reaction?