ரொம்ப நாளைக்கு பிறகு தமிழில் தரமான படம்.. மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குநர்.. புகழ்ந்து தள்ளிய ரஜினி!

''கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார்'' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Sep 2, 2024 - 20:15
Sep 3, 2024 - 10:17
 0
ரொம்ப நாளைக்கு பிறகு தமிழில் தரமான படம்.. மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குநர்.. புகழ்ந்து தள்ளிய ரஜினி!
Super Star rajinikanth And Mari Selvaraj

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்த 'வாழை' திரைப்படம், கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மாரி செல்வராஜின் சிறு வயது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா தொடங்கி ஷங்கர், மிஷ்கின், வெற்றி மாறன் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் வாழையை புகழந்து தள்ளினார்கள். 

இதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், ''உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை படத்தை கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ்ஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத் தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக் கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக்கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சிப் பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ்ஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்'' என்று கூறியிருந்தார்.

படம் பார்த்த அனைவரும் 'தமிழ் சினிமாவில் இதேபோல் ஒரு படம் பார்த்ததில்லை' என்று கூறி வருவதால், விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் வாழை மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. இந்நிலையில், 'சூப்பர் நடிகர்' ரஜினிகாந்துக்கு 'வாழை' திரைப்படத்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் ரஜினி கூறுகையில், ''மாரி செல்வராஜின் 'வாழை' படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு, மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்ட்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 

கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜூக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும். அன்புடன் ரஜினிகாந்த்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ், ''அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடித் தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன். உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் ரஜினிகாந்த் சார்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow