Indian 2: குதிரையில் வந்த கூல் சுரேஷ்... அனுதாபம் தெரிவித்த கமல்... இந்தியன் 2 அட்ராசிட்டிஸ் லோடிங்
கமலின் இந்தியன் 2 இன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தை பார்க்க கூல் சுரேஷ் குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சி, இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இன்று ஒருநாள் மட்டுமே 5 காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தது தமிழ்நாடு அரசு. இதனால் காலை முதலே இந்தியன் 2 படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையின் முக்கியமான திரையரங்குகளில் கூட ரசிகர்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. சில திரையரங்குகளில் காலை 10 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக புக் ஆகாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியன் 2 படம் பார்க்க கூல் சுரேஷ் குதிரையில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது தவறாமல் ஆஜராகிவிடுவார் கூல் சுரேஷ். அதேபோல், இந்தியன் 2 படம் பார்ப்பதற்காக கமலின் சேனாபதி கெட்டப்பிற்கு மாறிய கூல் சுரேஷ், குதிரையிலும் சென்று மரண மாஸ் காட்டியுள்ளார். கூல் சுரேஷை இந்த கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள், அவருடன் போட்டிப் போட்டு செல்ஃபி எடுத்துகொண்டனர். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், கூல் சுரேஷும் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கமலின் தீவிர ரசிகரான ரோபோ சங்கரும் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று, தேங்காய் உடைத்து இந்தியன் 2 படத்தை கொண்டாடினார். இந்தியன் தாத்தா கமல் என்ட்ரியான காட்சியில், ஆரத்தி எடுத்து மகிழ்ந்தார். சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் கமலின் 80ஸ், 90ஸ் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் இந்தியன் முதல் பாகத்தில் இடம்பெற்ற “அக்கடான்னு நாங்க உட போட்டா” பாடலுக்கு செம வைப் கொடுக்கும் விதமாக ஆட்டம் போட்டார். அதேபோல் அண்ணாத்த ஆடுடா பாடலுக்கும் அங்கிருந்த ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு இந்தியன் 2 படத்தை கொண்டாடினர். மேலும் இந்தியன் தாத்தா கெட்டப்பிலும் ஒருவர் திரையரங்கிற்கு வந்திருந்தது வைரலாகி வருகிறது.
இன்னொரு பக்கம் இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருவதால், படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கதை, திரைக்கதை என எல்லாமே அரதப் பழசு என விமர்சித்துள்ள ரசிகர்கள், படம் முழுக்க வாட்ஸப் ஃபார்வேர்ட் மெசேஜ்களாக உள்ளன என பங்கம் செய்துள்ளனர். இந்தியன் 2, இந்தியன் 3 என இல்லாமல் ஒரே படமாக இதனை ரிலீஸ் செய்திருக்க வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனிடையே கமலின் பழைய டிவிட்டர் பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருவது, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2016ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியில் கமல் செய்துள்ள அந்த டிவிட்டர் பதிவில், சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை வைரலாக்கி வரும் ரசிகர்கள், இந்தியன் 2 படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு கமலே ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதை போல உள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழிலேயே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத இந்தியன் 2, தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடைய சென்னை சத்யம் திரையரங்கில் கமல், நாசர், சீமான் உள்ளிட்ட பலரும் இந்தியன் 2 படத்தை பார்த்து ரசித்தார்.
What's Your Reaction?