பாஜகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேரும் ஆர்.கே.சுரேஷ்?.. பரபரப்பு பேட்டி!
''இனிமேல் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தேவையில்லாத விஷயங்கள் குறித்து பேச வேண்டாம். ஒருதலைபட்சமான படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்'' என்று ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் ஆர்.கே.சுரேஷ். பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த இவர் பின்பு அந்த கட்சியிலும் இணைந்தார். அவருக்கு பாஜகவில் ஓபிசி பிரிவு துணை தலைவர் பதவி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டையே உலுக்கிய ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் பெயரும் அடிபட்டது.
இது தொடர்பாக மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில், இனிமேல் சினிமாவில் மட்டும் முழு கவனம் செலுத்த உள்ளதாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று பேட்டியளித்த அவரிடம், 'நீங்கள் தீவிர அரசியலில் ஈடுபடவில்லையே'' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஆர்.கே.சுரேஷ் , ''நான் விருப்பத்துடன்தான் அரசியலுக்கு வந்தேன். தொடக்கத்தில் கமலுடன் பணியாற்றினேன். அதன்பிறகு பிரதமர் மோடியின் ஈடுபாடுகளை பார்த்து பாஜகவுக்கு சென்றேன்.
அரசியலில் இருப்பதால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. என்னுடைய சினிமா வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. சினிமாவில் இல்லாமல் இருந்திருந்தால் தீவிர அரசியலில் ஈடுபட்டு இருப்பேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சினிமாவை மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். சினிமாதான் என்னுடைய வாழ்வாதாரம். இப்போது நான் நடித்த 3 படங்கள் வெளியாகியுள்ளன. இனி சினிமாவில் மட்டுமே முழுக்க, முழுக்க கவனம் செலுத்த உள்ளேன்'' என்றார்.
இப்போது பாஜகவில் இருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''அதை காலம் பதில் சொல்லும். இப்போது நடிப்பில் கவனம் செலுத்துகிறேன்'' என்றார். இதேபோல் நடிகர் விஜய்யின் புதிய கட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ''நான் பார்த்தவரையில் நன்கு திட்டமிட்டு கட்சியை ஆரம்பித்தவர் விஜய்தான். எந்த விஷயம் செய்தாலும் அதை நன்கு திட்டமிட்டு பொறுமையாக செய்பவர் விஜய்.
கடந்த 10 ஆண்டுகளாக திட்டமிட்டுதான் அவர் கட்சி தொடங்கியுள்ளார். நாம் என்ன செய்கிறோம்; என்ன செய்ய போகிறோம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் ரூ.200 கோடி, ரூ.300 கோடி சம்பளம் வாங்கும் ஒருவர் அதை விட்டு அரசியலுக்கு வருவது சாதாரணம் இல்லை. தவெக கொடியில் இருப்பது வாகை மலராக இருந்தாலும் சரி, தூங்கு மூஞ்சி பூவாக இருந்தாலும் சரி அதுவும் ஒரு பூ தானே. அதற்கும் ஒரு தன்மை உள்ளது'' என்று கூறினார்.
அப்போது தவெக கட்சியில் இணைய திட்டம் உள்ளதா? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆர்.கே.சுரேஷ் , ''முதலில் நான் விஜய்யுடன் இணைந்து சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். பைரவா படத்தில் டேனியல் பாலாஜிக்கு பதிலாக நான் நடிக்க வேண்டியது. ஆனால் நடிக்க முடியாமல் போய் விட்டது. முதலில் நான் அவரிடம் சினிமாவில் பயணிக்கிறேன். அதன்பிறகு அவருடன் அரசியலில் பயணிப்பது குறித்து யோசிப்போம்'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆர்.கே.சுரேஷ், ''இனிமேல் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தேவையில்லாத விஷயங்கள் குறித்து பேச வேண்டாம். ஒருதலைபட்சமான படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இனிமேல் நான் நடிக்கும் படங்கள் யாரை சார்ந்தும் இருக்காமல், பொதுவான படமாகவே இருக்கும். சில விஷயங்கள் எனது மனைவி, குழந்தைகளை பாதிப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்'' என்று பேசி முடித்தார்.
What's Your Reaction?