Malayalam Movie Director Ranjith Balakrishnan Case : நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு தமிழ், மலையாள முன்னணி நடிகை ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் உள்பட அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ம் ஆண்டு கேரள அரசு கமிஷன் அமைத்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தங்களது அறிக்கையை கேரள அரசிடம் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
அதாவது இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன், நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ்சித்திக், ரியாஸ் கான், நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். இதனால் மலையாள திரையுலகமே தள்ளாடி வருகிறது.
இதன் காரணமாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லால் உட்பட 17 உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதுவரை மலையாள திரையுலகில் பெண்கள் மட்டும் பாலியல் புகார்கள் தெரிவித்து இருந்த நிலையில், முதன்முறையாக ஆண் ஒருவர் தனக்கும் பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் கொடுத்துள்ளார்.
அதாவது இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் கடந்த 2012ம் ஆண்டு ஸ்டார் ஹோட்டலில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு நபர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த நபர் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், ''ரஞ்சித் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'பவுட்டியுடே நாமத்தில் (Bavuttiyude Namathil) படத்தின் படப்பிடிப்பு கோழிக்கோடு பகுதியில் நடந்தது.
நான் இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்றேன். இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கேட்பதற்காக இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணனை ஸ்டார் ஹோட்டலில் வைத்து சந்தித்தேன். அப்போது அவர் உங்களை ஆடையின்றி பார்க்க விரும்புவதாக கூறி என்னை நிர்வாணமாக நிற்கச் சொன்னார். மேலும் உங்கள் கண்கள் அழகாக உள்ளது எனக்கூறி கண் மை போட்டுக் கொள்ளும்படி கூறினார். அதே ஹோட்டலில் தங்கி இருந்த அந்த பட நடிகையின் தோழிக்கு காண்பிப்பதற்காக ரஞ்சித் பாலகிருஷ்ணன் என்னை நிர்வாணமாக செல்போனில் படம்பிடித்துக் கொண்டார்'' என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது ஒரு நடிகை பாலியல் புகார் கொடுத்திருந்தார். இப்போது ஆண் ஒருவரும் அவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.