Actor Vishal Net Worth 2024 : 2004ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் மகனான விஷாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. முக்கியமாக லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தியது. இதனால், தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டினார் விஷால். திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், சமர், தீராத விளையாட்டுப் பிள்ளை, பட்டத்து யானை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, துப்பறிவாளன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
ஹீரோவாக மட்டுமின்றி ஒருபக்கம் படங்கள் தயாரிப்பதிலும் பிஸியான விஷால், இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். அதேநேரம், அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதற்கெல்லாம் சேர்த்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கம்பேக் கொடுத்தார் விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம், கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே இயக்குநர் மிஷ்கினுடன் ஏற்பட்ட பிரச்சினையால், துப்பறிவாளன் 2ம் பாகத்தை விஷாலே இயக்கி வருகிறார். இப்போதைக்கு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ஒரே திரைப்படம் துப்பறிவாளன் 2 மட்டுமே. இந்நிலையில், இன்று 47வது பிறந்தநாள் கொண்டாடும் விஷாலுக்கு, திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவரது புதிய படம் குறித்த அறிவிப்புகள் ஏதேனும் வருமா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், விஷாலின் சம்பளம், சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க - வாழை பஞ்சாயத்து... மாரி செல்வராஜ் விளக்கம்!
அதன்படி, விஷால் ஒரு படத்தில் நடிக்க, 13 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதுதவிர பட தயாரிப்பு, ரியல் எஸ்டேட் என பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார் விஷால். இதன்மூலம் விஷாலுக்கு மாதம் 3 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 25 முதல் 30 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். அதேபோல், சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் விஷாலுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. விஷாலின் மிகப் பெரிய ஆசையே ஆஸ்டன் மார்ட்டின் கார் தான், 4 கோடி மதிப்பிலான இந்த காரை சொந்தமாக வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதேநேரம் தற்போது விஷாலிடம் 76 லட்சம் மதிப்புடைய BMW X5, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான Toyota Fortuner, Jaguar XF Rs கார்கள் சொந்தமாக உள்ளன. இதுதவிர இரண்டு விலையுயர்ந்த பைக் வாங்கியுள்ளாராம் விஷால். இதன் அடிப்படையில் விஷாலின் ஒட்டுமொத்த மொத்த சொத்து மதிப்பு, 150 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் விஷால், அங்கேயும் ரொம்ப ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். ஆனால், இன்னும் திருமணம் செய்துகொள்ளாத விஷால், முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஷாலும் வரலட்சுமியும் காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.