கமல்ஹாசன் 70: ‘சினிமாவில் ஆதி முதல் அந்தம் வரை’
உலகநாயகன் கமல்ஹாசனின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை பற்றிய 70 முக்கிய விஷயங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.
உலகநாயகன் கமல்ஹாசனின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை பற்றிய 70 முக்கிய விஷயங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.
1. கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் பிரபல வழக்கறிஞரும், சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.
2. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மற்றும் என்ற மூன்று சினிமா ஜாம்பவங்களுடன் நடித்திருக்கிறார் கமல்.
3. தனது 6வது வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், அதில் சிறப்பாக நடித்ததற்காக ராஷ்டிரபதி விருதை வென்றார்.
4. 1962ஆம் ஆண்டில் வெளியான கண்ணும் கரலும் திரைப்படம் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார் கமல்ஹாசன்.
5. நடிப்பின் மீது கமலுக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து, அவரை டிகேஎஸ் நாடக சபாவில் சேர்த்துவிட்டார் தந்தை சீனிவாசன்.
6. 7 ஆண்டுகள் இடைவேளைக்குப் பின், துணை நடன இயக்குநராக ’தங்கப்பன்’ என்ற படத்தில் ரீ-என்ட்ரீ கொடுத்தார்.
7. 1975இல் பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ஹீரோவானார் கமல்.
8. 1976இல் இருந்து 1989 வரை மன்மத லீலை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு, உல்லாச பறவைகள், குரு, மூன்றாம் பிறை, விக்ரம், புன்னகை மன்னன், நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மலையாளத்தில் சத்யவான் சாவித்திரி என பல ஹிட் படங்களை கொடுத்தார்.
9. 1981இல் கமல்ஹாசனும் அவருடைய சகோதரர்களும் இணைந்து ஹாசன் பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.
10. 1981ஆம் ஆண்டில் கமலின் 100வது படம் ‘ராஜபார்வை’ வெளியானது. இந்த திரைப்படத்தை ஹாசன் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
11. 1980களில் அதிக பட்ஜெட்டில் படமாக உருவானது கமல்ஹாசனின் விக்ரம், இளையராஜாவும் முதன்முறையாக கம்ப்யூட்டர் இசையை பயன்படுத்தியது இந்தப் படத்தில் தான்.
12. தமிழ் திரையுலகை கட்டி ஆண்ட கமல்ஹாசன், 1981ல் வெளியான Ek Duuje Ke Liye என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்தார்.
13. 1985 வரை இந்தியில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த கமல்ஹாசனை பாராட்டிய ஊடகங்கள், ‘மும்பை நடிகர்களுக்கு கமல் ஒரு அச்சுறுத்தல்’ என புகழ்ந்தன.
14. 1985 வரை பாலிவுட்டில் கலக்கிய கமல், மீண்டும் தமிழ்த் திரையுலகில் தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார்.
15. 1990இல் இருந்து 2009 வரை மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், மகாநதி, நம்மவர், சதிலீலாவதி, இந்தியன், அவ்வை சண்முகி, காதலா காதலா, ஹே ராம், தெனாலி, ஆளவந்தான், பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், அன்பே சிவம், வசூல்ராஜா, தசாவதாரம், உன்னைபோல் ஒருவன் என பல ஹிட் படங்களை வழங்கினார்.
16. கமலின் தங்கை நளினி ரகுவின் மகன் கௌதம், ஹேராம் திரைப்படத்தில் கமலுக்கு பேரனாக நடித்தார்.
17. ஹேராம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சரிகா, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றார்.
18. கனடாவில் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் விநியோகம் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது தசாவதாரம்.
19. தன்னுடன் அன்னை வேளாங்கன்னி, அபூர்வ ராகங்கள், உணர்ச்சிகள், சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீவித்யாவை காதலித்தார் கமல்.
20. 1978இல் நடன கலைஞர் வாணி கணபதியை மணந்தார் கமல். வாணி 1975ல் வெளியான மேல்நாட்டு மருமகள் திரைப்படத்தில் கமலுடன் நடித்திருந்தார்.
21. கமலுக்கு பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் வாணி; பிறகு 1988இல் இருவருக்கும் விவாகரத்து ஆனது.
22. 1988இல் நடிகையும் ஆடை வடிவமைப்பாளருமான சரிகாவை திருமணம் செய்தார் கமல்; இவர்களுக்கு 1986இல் சுருதி ஹாசன், 1991ல் அக்ஷரா ஹாசன் என 2 மகள்கள் பிறந்தனர்.
23. 2004ஆம் ஆண்டில் சரிகா உடனான தனது திருமண உறவை முறித்துக்கொண்டார் கமல்.
24. தன்னுடன் அன்னை வேளாங்கன்னி, அபூர்வ ராகங்கள், உணர்ச்சிகள், சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீவித்யாவை காதலித்தார் கமல்.
25. கமலுடன் அதிக முறை ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி. இருவரும் இணைந்து 27 படங்கள் நடித்துள்ளனர்.
26. கமலை வைத்து 28 படங்களை இயக்கியுள்ளார் கே.பாலசந்தர்.
27. நடிகராக மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, நடன இயக்குநராக பல படங்களை செதுக்கியிருக்கிறார் கமல்.
28. தமிழ்நாட்டில் இருந்து முதலில் ஆஸ்கர் விருது வாங்குவார் என நம்பப்பட்டதால் “ஆஸ்கர் நாயகன்” என ரசிகர்கள் இவரை அழைத்தனர்.
29. கமல் நடித்த நாயகன், இந்தியன், ஹே ராம் உள்பட 7 படங்கள் ஆஸ்கர் ரேஸில் இடம்பெற்றிருந்தது. ஆனால் விருது பெறவில்லை.
30. சினிமாவில் தனது ஆஸ்தான குருவாக கே. பாலச்சந்தரை கருதினார் கமல்.
31. நான் பார்த்ததிலேயே சிறந்த நடிகர் கமல் என நகைச்சுவை நடிகர் நாகேஷ் புகழ்ந்திருக்கிறார்.
32. தன்னுடைய ரசிகர் மன்றத்தை ’கமல் நற்பணி இயக்கமாக’ மாற்றிய முதல் தமிழ் நடிகர் கமல்ஹாசன்.
33. சரிகாவுக்கு பிறகு 2005இல் இருந்து 2016ஆம் ஆண்டு வரை நடிகை கௌதமியை காதலித்து வந்தார்.
34. சினிமாவில் சென்னை பாஷை மெதுவாக எட்டிப்பார்த்தது. அப்போது பல மொழிகளை பேசி அசத்தும் கமலுக்கு சென்னை பாஷை மட்டும் எட்டாக் கனியாக இருந்தது. இதனால் லூசு மோகனிடம் இருந்து சென்னை பாஷையை கற்றுக்கொண்டார் கமல்
35. 2005ஆம் ஆண்டில் சத்யபாமா பல்கலையில் டாக்டரேட் பட்டம் பெற்றார்.
36. 2010இல் இருந்து 2018ஆம் ஆண்டு வரை மன்மதன் அம்பு, விஸ்வரூபம், உத்தம வில்லன், பாபநாசம் போன்ற கலவையான திரைப்படங்கள் வெளியானது.
37. 2013ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக இருந்ததால், ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு 15 நாட்கள் தடை விதித்தது.
38. திரையரங்குகளில் விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியவில்லை என்றால் நேரடியாக தொலைகாட்சி வழியே ரிலீஸ் செய்வதற்கும் ரெடியாக இருந்தார்.
39. கமல் சொன்ன இந்த விஷயமே இன்றைய ஓடிடி தளங்களுக்கு அடித்தள ஐடியாவாக அமைந்தது.
40. கடவுள் மறுப்பாளராக இருக்கும் கமலுக்கு சில எதிர்ப்புகள் இருந்தது. இதனால், “கடவுள் இல்லை என்று சொல்பவர் பகுத்தறிவாளி. ஆனால் ஒரு பாட்டி பாசத்தில் என் நெற்றியில் விபூதி வைத்தால் அதை அழிக்கமாட்டேன்” என கூறி கடவுள் பற்றிய தன்னுடைய புரிதலை வலுவாக எடுத்திரைத்தார் கமல்
41. 2013ஆம் ஆண்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் காதலி கௌதமியுடன் பங்கேற்றார் கமல். அதில் வென்ற 50 லட்ச ரூபாயை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
42. விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறிய கமல் 2015ஆம் ஆண்டில் போதீஸ் விளம்பரத்தில் நடித்தார். அந்த பணத்தை ஏய்ட்ஸ்-நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடையளித்தார்.
43. தமிழ், மலையாளம், பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி, ஆங்கில என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தவர் கமல்.
44. கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தை 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இணைத்தது டைம்ஸ் நாளிதழ்
45. 67வது கான்ஸ் திரைப்பட திருவிழாவுக்கான இந்திய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் கமல்
46. தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில் உரையாற்றும் பெருமையை பெற்றார்.
47. தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல், ”ஸ்ரீ வித்யா என் அன்பு காதலி, அந்த காதல் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்று அவசியம் இல்லை என வெளிப்படையாக பேசினார்.
48. 2016ஆம் ஆண்டில் செவாலியர் விருது பெற்றார்.
49. 2018இல் இருந்து 2022 வரை கமலின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
50. 2017ஆம் ஆண்டில் வெள்ளித் திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் எண்ட்ரீ கொடுத்தார் கமல். மலையாள தொலைக்காட்சியில் ’ஜனநாயகனொப்பம் உலகநாயகனும்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கமல்.
51. கமல்ஹாசனின் தங்கை நளினி ரகு ஒரு நடன ஆசிரியை என்பதால் அவருக்கு நளினி மஹால் என்ற அரங்கத்தை கட்டிக்கொடுத்தார் கமல்
52. ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் வாசலில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சிலை ஒன்றை நிறுவியுள்ளார்.
53. திரையில் மட்டுமே ஹீரோவாக வலம் வந்த கமல், அரைசியலிலும் ஜொலிக்க நினைத்ததால் 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.
54. 2017இல் இருந்து 2023ஆம் ஆண்டு வரை தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், அதை அரசியல் பிரச்சார மேடையாகவும் பயன்படுத்திக்கொண்டார்.
55. 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் டார்ச்சை வைத்து டிவியை உடைப்பது போல வெளியிட்ட பிரச்சார வீடியோ பேசுபொருளானது.
56. அரசியல் கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டிலெயே 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் களம்கண்டது மக்கள் நீதி மய்யம். ஆனால் எந்த தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் சுமார் 15 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளைப் அக்கட்சி பெற்றிருந்தது .
57. 2021இல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு தாவியதால் மநீமவின் பலம் குறைந்தது.
58. 2021ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட கமல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
59. அரசியலில் கமல் பிசியானதால் இனி சினிமாவில் கவனம் செலுத்தமாட்டார் என எண்ணும்போது தான், 2022ஆம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பளித்ததால் ஹீரோ ரேஸில் தன்னுடைய இருப்பை காட்டிக்கொண்டார் கமல்.
60. இதுவரை 4 தேசிய விருது, 10 தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்ஃபேர் விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி, செவாலியர் விருது என பல விருதுகளை பெற்றவர்.
61. கமல்ஹாசனை போலவே அவரது அண்ணன் சாருஹாசனும் Tabarana kathe என்ற கன்னட படத்திற்காக தேசிய விருது வென்றவர்.
62. ஹாலிவுட் இயக்குநரான Barrie M. Osburne கமல்ஹாசனை என்சைகிலோபீடியா என அழைத்தார்.
63. அரசியலில் தொடர் பின்னடைவுகளை சந்தித்த கமல், தன்னை பாஜகவின் B டீம் என விமர்சித்த திமுக-உடன் 2024இல் கூட்டணி வைத்தார்
64. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்காக பிரச்சாரமும் மேற்கொண்டார்.
65. இதுவரை 27 திரைப்படங்களை தயாரித்துள்ளது கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ்.
66. பல மொழிகளை அறிந்த கமல், இந்தியன் 2 திரைப்படத்திற்காக குஜராத்தியும் பேச பழகிக் கொண்டார்.
67. தனது இத்தனை ஆண்டு திரை வாழ்க்கையில் நகைச்சுவை நடிகர் நாகேஷை கமல் நினைவுகூராத நாட்களே இல்லை. ”என் கலை மரபணுவில் நாகேஷ் வாழ்கிறார்” என உணர்ச்சி பொங்க கமல் கூறியிருக்கிறார்.
68. சமீபத்தில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் “நான் தோற்றுப்போன அரசியல்வாதி” என கமல் கூறியது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
69. நடிகர் சங்க கடனை அடைக்க ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார்.
70. தக் லைஃப் திரைப்படத்தையும் சேர்த்தால், 70 ஆண்டுகளில் 234 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கமல். நடிப்பில் மட்டுமல்லாமல், எழுத்து, இயக்கம், நடனம், பாட்டு, இலக்கியம், அரசியல் என பல விஷயங்களின் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இப்படியான ஒரு கலைஞானியை பார்த்து ”உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு” என படுவதில் தவறே இல்லை என்றே தோன்றுகிறது!
What's Your Reaction?