Soamavati Amavasai: சோமாவதி அமாவாசை - ஆவணி அமாவாசையில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது

திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர்.

Sep 2, 2024 - 06:27
Sep 2, 2024 - 18:02
 0
Soamavati Amavasai: சோமாவதி அமாவாசை - ஆவணி அமாவாசையில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது
somvati amavasya today

சோமாவதி அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சிறப்பு வாய்ந்த் இந்த நாளில் அஸ்வத்த விருக்ஷம் எனப்படும் அரசமரத்தை பக்தியுடன் 108 அல்லது 56 அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் 9 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியம். இதன் மூலம் பிரம்ம-விஷ்ணு-சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர். சோமாவதி அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடி, முன்னோர்களுக்கு தில தர்ப்பணம், அதாவது எள்ளும் நீரும் கொடுப்பது பித்ருக்களை சாந்திப்படுத்தும். அமாவாசை தினத்தன்று மௌன விரதம் கடைபிடிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்  என மத்ஸ்ய புராணத்திலும் சோமவதி அமாவாசையின் மகத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சோமாவதி அமாவாசை தினத்தில் புனித நதிகளில் நீராடினால் செல்வச் செழிப்புடனும், நோய்களற்றவர்களாகவும், துக்கங்களிலிருந்து விடுபடுவார்கள் என்று சோமவதி அமாவாசையின் முக்கியத்துவம் பற்றி மகாபாரதத்தில் பீஷ்மர் தர்மருக்கு கூறியுள்ளார். 

சோமாவதி அமாவாசை விரதத்தை தம்பதிகள் இணைந்து இருப்பது சிறப்பானது. இதனால் தம்பதியர்கள் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடும் ஒற்றுமையோடும் இருப்பார்கள்.  தம்பதியர் இணைந்து சோமாவதி அமாவாசை நாளில் அரசமரமும் வேப்பமரமும் இணைந்த மரங்களை சுற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்: 

"மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:

அக்ஷி ஸ்பந்தம் புஜ ஸ்பந்தம் து:ஸ்வப்னம் துர் விசிந்தனம் சத்ரூணாம் ச ஸமுத்பன்னம் அச்வத்த சமயஸ்வ மே".

மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவாகவும், மரத்தின் நடுப்பகுதியில் மஹா விஷ்ணுவாகவும் மரத்தின் நுனி கிளை பகுதியில் சிவ பெருமானின் ரூபமாகவும்  காட்சியளிக்கும் மரங்களின் தலைவனான  அரச மரமே உனக்கு நமஸ்காரம் என்று கூறி வணங்க வேண்டும். 

அரசமரத்தை சுற்றி வரும் போது எண்ணிக்கை சரியாக அமைய ஒவ்வொரு சுற்றுக்கும் ஏதோ ஒரு பூவோ, பழமோ, கல்கண்டோ ஒரு பொருளை மரத்தினடியில் விடுவது வழக்கம். சுற்றுக்கள் முடிந்த பின் அந்த பொருளை அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு தந்துவிடலாம். இன்று முழுநாள் அமாவாசை உள்ளதால் மாலையில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். 

இந்த நாளில் ஹரித்வார், திரிவேணி மற்றும் பிற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடுவது வழக்கம். சோமவதி அமாவாசையன்று ருத்ராபிஷேகம் செய்வதும், அப்படி செய்யும் அபிசேகத்தை பார்ப்பதும் வாழ்வில் அனைத்து வளங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.

சூரிய பகவானை காலையில், வழிபடுவது பித்ருக்களின் ஆசிகளைப் பெற உதவும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அதிகரிக்கும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளிப்பதும், பசுவை வழிபடுவதும் வாழ்க்கையில் அமைதியையும் செல்வ வளத்தையும் கொடுக்கும்.  

சோமாவதி அமாவாசை நாளில் சிவபெருமானை வழிபடுவதும், அன்றைய தினம் விரதம் இருப்பதும் நவ கிரக தோஷங்களையும் ஜாதகத்தில்உள்ள தோஷங்களை போக்க உதவும். சோமாவதி அமாவாசை நாளில் மாலையில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி, பசு நெய்யில் தீபம் ஏற்றி, 'ஓம் நம சிவாய' என்று 108 முறை கூறி வழிபடலாம். பொருளாதார சிக்கல்களை நீக்கும். கடன் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.  அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow