சீதாராம் யெச்சூரி மறைவு.. தோழர்களுக்கு ஆறுதல் கூறும் வைகோ, டாக்டர் ராமதாஸ் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரார் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sep 12, 2024 - 18:07
 0
சீதாராம் யெச்சூரி மறைவு.. தோழர்களுக்கு ஆறுதல் கூறும் வைகோ, டாக்டர் ராமதாஸ் இரங்கல்
sitaram yechury passed away mdmk vaiko, pmk dr ramadoss condolences

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால்  இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியம், மிகுந்த வேதனையும் அடைந்தேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி அவர்கள் 72 வயதில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை அடைந்தார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர், சென்னையில் 12.08.1952 அன்று பிறந்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும், ஆந்திராவிலும் கல்வி பயின்ற சீத்தாராம் யெச்சூரி அவர்கள், மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கக் கூட்டமைப்பில் இணைந்து கட்சி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டார்.

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, மிசா கொடுமைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாணவர் சக்தியைத் திரட்டிப் போராடினார். அதன் காரணமாக கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் சிறப்புடன் பணியாற்றியவர். அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாராகவும் 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இவர் பணியாற்றினார்.இவரது அறிவார்ந்த ஆங்கிலக் கட்டுரைகளும், நூல்களும், தீக்கதிர் ஏட்டில் வெளிவரும், பொதுச்செயலாளர் மேசையிலிருந்து என்ற பகுதியில் வெளிவரும் கருத்துக்களும் இவரின் எழுத்தாற்றலுக்குச் சான்றாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராளித் தலைவராக பணியாற்றிய இவரின் மறைவு இடதுசாரிகளுக்கும், முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரது தன்னலமற்ற இயக்கப் பணிக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவரைப் பிரிந்த துயரில் உள்ள தோழர்களுக்கும் ஆறுதலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

இதே போல டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால்  இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியம், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பதின் வயதிலேயே தெலுங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது. 2006&ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.

அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைகப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுத் திரட்டினேன். பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி அவர்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும்.

யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட்  உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும்  இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow