வீட்டை விட்டு வெளியேறும் ஷாருக்...! பாலிவுட் பாட்ஷாவுக்கே இந்த நிலையா?
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், அவர் ஆசை ஆசையாக வாங்கிய மன்னட் இல்லத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளாராம். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அரண்மனையை போல பிரம்மாண்டமாக இருக்கும் மன்னட் இல்லத்தில் இருந்து ஷாருக்கான் வெளியேற என்ன காரணம்..? இப்போது பார்க்கலாம்....

இந்தி சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக டாப் மோஸ்ட் ஹீரோவாக வலம் வருகிறார் ஷாருக்கான். பாலிவுட் பாட்ஷா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், ஒரு படத்தில் நடிக்க 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார். சினிமா மட்டுமின்றி விளம்பரங்களிலும் கோடிகளில் சம்பாதிக்கும் ஷாருக்கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் டீம் உட்பட ஏராளமான பிஸினஸ்கள் செய்தும் கோடிகளை குவித்து வருகிறார். தனியாக பிரைவேட் ஜெட், பல சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ள ஷாருக்கான், மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள மன்னட் இல்லத்தில் வசித்து வருகிறார்.
அரண்மனை போல பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த மன்னட் இல்லம், முதலில் வில்லா வியன்னா என்ற பெயரில் இருந்தது. 1914 ஆம் ஆண்டு நாரிமன் கே. துபாஷாவால் கட்டப்பட்ட பாரம்பரியமான பங்களா என்பதால், இதன் மீது ஷாருக்கானுக்கு ஒரு கண் இருந்தது. இதனால், 2001 ஆம் ஆண்டில் பல கோடிகள் கொடுத்து வியன்னா வில்லாவை வாங்கிய ஷாருக்கான், அதனை மன்னட் இல்லமாக பெயர் மாற்றினார். ஆறு மாடி கொண்ட இந்த மன்னட் இல்லத்தில், கிளாஸ்ஸியான நீச்சல் குளம், பார், மினி தியேட்டர், பல சொகுசு அறைகள் என 7 ஸ்டார் ஹோட்டல்களுக்கு நிகராக ஏகப்பட்ட ஹைடெக் அம்சங்கள் நிறைந்துள்ளன.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ‘அண்டிலா’ (Antilia) இல்லம் போல, ஷாருக்கானின் மன்னட் இல்லமும் மும்பைவாசிகள் மத்தியில் ரொம்பவே பிரபலம். முக்கியமாக தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வரும் ரசிகர்களை பார்க்க, மன்னட் இல்லத்தின் வியூ பாயிண்ட்டில் இருந்து ஷாருக்கான் வைப் கொடுப்பார். அப்போதெல்லாம் இந்த மன்னட் இல்லம் தான் மும்பை ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக இருக்கும். இப்படி ஷாருக்கானின் இன்னொரு அடையாளமாக இருக்கும் மன்னட் இல்லத்தில் இருந்து, தனது குடும்பத்துடன் அவர் வெளியேற முடிவு செய்துள்ளாராம்.
மன்னட் இல்லம் பழைய கட்டடம் என்பதால், இதுவரை 6 மாடிக்கு மேல் கட்ட அனுமதி கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் தான் மேலும் இரண்டு மாடிகளை கட்ட முடிவு செய்த ஷாருக்கான், அதற்காக பெர்மிஷன் வாங்கி, 25 கோடி பட்ஜெட்டில் புதுப்பிக்க உள்ளாராம். இதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் தான், மன்னட் இல்லத்தில் இருந்து வெளியேறி வாடகை வீட்டில் செட்டில் ஆகப் போகிறாராம். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானிக்கு சொந்தமான 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பை, மாதம் 24 லட்சம் ரூபாய் வாடகைக்கு புக் செய்துள்ள ஷாருக், சீக்கிரமே அங்கு ஷிப்ட் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், மன்னட் இல்லம், சும்மாவே அரண்மனை மாதிரி இருக்கும், இதுல இன்னும் இரண்டு மாடியா என வாயைப் பிளந்து உச் கொட்டி வருகின்றனர்.
What's Your Reaction?






