அதிமுக கொடுத்த ஆஃபர்? உதறித்தள்ளிய விஜய்? 45 சீட் கணக்கு என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மேடையில், ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அப்படி ஆதவ் என்ன பேசினார்? அந்த பேச்சால் கிசுகிசுக்கப்படும் விசயம் என்ன....? பார்க்கலாம் இந்த தொகுப்பில்......

தவெக மாநாட்டின் போது திமுக, பாஜகவை வெச்சு செய்த விஜய், அதிமுகவை சீண்டக் கூட நினைக்கவில்லை. இதன் விளைவாக தவெகவும் அதிமுகவும் தான் கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் களம் காணப்போகிறது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் திடீரென அதிமுக உடனான கூட்டணிக்கு NO என தவெக தலைவர் விஜய் கூறியது பேசுபொருளானது.
அதிமுக கொள்கையில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் அல்லது எதிர்கட்சி தலைவர் பதவி தனக்கு கிடைக்காது என்பதாலே, விஜய் அதிமுக-வை ஓரம்கட்டியதாக கூறப்பட்டது.
இத்தகைய சூழலில், கூட்டணி தான் செட் ஆகல, தேர்தல் வியூகத்தையாவது சரியாக வகுப்போம் என்று ஆதவ் அர்ஜூனா மற்றும் பிரசாந்த் கிஷோரை இழுக்க எடப்பாடியார் எண்ணிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. அப்போதுதான், இருவரும் “இருங்க பாய்” என்று யு டர்ன் போட்டு தவெக பக்கம் சென்றனர். ..
இதனையடுத்து அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால் நிச்சயமாக வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதாலும், திமுகவிற்கு இது நெருக்கடியை கட்டாயம் ஏற்படுத்தும் என்றும் பி.கே. பிளான் செய்ததால் அதிமுகவிடம் அவர் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டதாக கூறப்பட்டது. மேலும் அந்த ரகசிய மீட்டிங்கில், இந்த கூட்டணி வெற்றி பெற்றால் தவெக இரண்டரை வருடங்களும், அதிமுக இரண்டரை வருடங்களும் பிரித்து ஆட்சி செய்யலாம் என்ற ஆஃபர் முன்வைக்கப்பட்டதாக விவரமறிந்தவர்கள் கூறினர்.
ஆனால் இந்த மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவுதான் என்ன என்பதை பற்றிய தகவல்கள் கசியாமல் போனது. இந்நிலையில் தான் த.வெ.க. இரண்டாம் ஆண்டு விழா மாநாட்டில் ஆதவ் அர்ஜூனவின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. அந்த மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, த.வெ.க.-வுக்கு “45 தொகுதிகள் கொடுங்கள், நாங்கள் எம்.எல்.ஏ ஆகிறோம் என்று நாங்கள் வரவில்லை; தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவே வந்திருக்கிறோம்” என உறுதிபட தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு கேட்ட தவெக-விடம், ’கொஞ்சம் சட்ணி வேணா இருக்கு’ என்பதை போல வெறும் 45 சீட்டுகளை தருகிறோம் என்று அதிமுக சொன்னதாகவும், அதனால் தான் கூட்டணி வேண்டாம் என்று விஜய் உதறித் தள்ளியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது ஈகோவை விட்டுக்கொடுத்து அறிவித்த வேட்பாளரை கூட திரும்பப்பெற்று விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. உடன் கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
அதே பாணியில் திமுக-வை எதிர்க்கட்சியாக கூட ஆகவிடாமல் செய்ய விஜய் உடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுவதாகவும்., ஆனால் உங்களை முதலமைச்சர் ஆக்க நான் கட்சி தொடங்கவில்லை என்று விஜய் அடம்பிடிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கத்தரிக்கா முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும் என்ற பழமொழியை போல தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் அடுத்த சில மாதங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்கு வெளிச்சத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை..
What's Your Reaction?






