பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நாகேந்திரன் உடல் நிலை திடீரென மோசமடைந்து வேலூர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
கல்லீரல் பிரச்சனை காரணமாக, சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கடந்த விசாரணையின் போது, கல்லீரல் சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவை அமைத்து நாகேந்திரனை, பரிசோதித்து அறிக்கை அளிக்கும் படி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இந்த அறிக்கை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் தாக்கல் செய்யப்பட்டது.
இதை பார்த்த நீதிபதி, நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் எந்த விவரத்தையும் அறிக்கையில் குறிப்பிடவில்லை எனக்கூறி நாகேந்திரனின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்