திருமணதடை நீக்கும் சங்கரன்கோவில் கோமதி அம்மன்.. ஆடித்தபசு கோலத்தின் ஐதீகம் என்ன?

ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த, ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் தவம் இயற்றினாள். ஆடிபவுர்ணமி உத்தராட நட்சத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிசனம் அன்னை கோமதிக்கு கிடைத்தது. இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோற்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

Jul 11, 2024 - 11:17
 0
திருமணதடை நீக்கும் சங்கரன்கோவில் கோமதி அம்மன்.. ஆடித்தபசு கோலத்தின் ஐதீகம் என்ன?
aadi thabasu festival


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவின் சிகர நிகழ்வுகளான திருத்தேரோட்டம்  வருகிற 19ஆம் தேதியும்,தவசுக்காட்சி வருகிறது 21ஆம் தேதி நடைபெற உள்ளது

ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த , ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த தலத்தில் கோமதி அம்மன் தவம் இயற்றினாள். ஆடிபவுர்ணமி உத்தராட நட்சத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிசனம் அன்னை கோமதிக்கு கிட்டியது . இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோற்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார்.

சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின. அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும்.

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் காலசர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது . சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த தினத்தை நினைவுகூரும் வகையில் இவ்விழா வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow