நாக பஞ்சமி கருட பஞ்சமி - திருமணத்தடை, புத்திரபாக்கிய தடை நீக்கும் விரதம்

நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு இன்று (09.08.2024) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நாகதீர்த்தம் வனக்கோயிலில் ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகம், நாகர் ஹோமம், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது.

Aug 9, 2024 - 11:13
 0
நாக பஞ்சமி  கருட பஞ்சமி - திருமணத்தடை, புத்திரபாக்கிய தடை நீக்கும் விரதம்
நாக பஞ்சமி கருட பஞ்சமி

மதுரை: பாம்பென்றால் படையும் நடுங்கும். அதே போல பாம்பு கிரகங்களான ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகள் ஏற்படுகின்றன. திருமண தடை, புத்திரபாக்கிய தடை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீங்க ஆடி மாதம் வளர்பிறை சுக்லபஞ்சமி திதியான இன்று நாக பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மறுநாள் கருட பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாக பஞ்சமி நாளில் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும் மற்றும் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்து புறாநாங்களில் பாம்புக்கும், கருடருக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது. நோய் தீர்ர்க்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானுக்கு கருட சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜெயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு இன்று (09.08.2024) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகம், நாகர் ஹோமம், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது.

நேற்று நாக சதுர்த்தியன்று நாகதீர்த்தம் வனக்கோயிலில் நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்னியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினமாகும்.

புத்திரபாக்கியம் கிடைக்கும்:

இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, தங்கம் அல்லது பிற உலோகத்தில் பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

நீண்ட ஆயுள் கொடுக்கும் நாக பஞ்சமி வழிபாடு:

நாக பஞ்சமியை முன்னிட்டு  இன்று வீட்டில் பூஜை செய்தவர்கள் சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சித்து, பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபடலாம். இப்பூஜையினால் தங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

கருட பஞ்சமி விரத வழிபாடு:

நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம்.  கருடனை ’பட்சி ராஜா’ அதாவது ‘பறவைகளின் தலைவன்’ என்று அழைப்பர். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை. பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே ‘கருடபஞ்சமி’ என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

நாக தோஷம் நீக்கும் விரதம்:

கருட பஞ்சமி கர்நாடகாவில் பெண்களால் விரதம் இருந்து மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்திய ரக்சாபந்தன் போல தன் சகோதரர்களின் நலன் வேண்டிச் செய்கின்ற பண்டிகை கருடபஞ்சமி. ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு சாப்பிடலாம். பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம்.

கருட ஹோமம்:

கருடபஞ்சமி நாளான இன்று குழந்தை வரம் வேண்டியும், ஆண் பெண் திருமணம் வேண்டியும், நற்பலன்கள் பெறவும் நாகரையும், கருடனையும் வேண்டி நடைபெற்ற மேற்கண்ட யாகங்களிலும் அபிஷேக ஆராதனைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இந்த யாகங்களில் நெய், தேன், விசேஷ மூலிகைகள், நவதானியங்கள், மஞ்சள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், நவ சமித்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ அஷ்ட நாக கருடருக்கு தேன் அபிஷேகமும், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு பால், மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்று விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் படிக்க: அறுபடை வீடு ஆன்மீக சுற்றுலா.. அரோகரா முழக்கத்தோடு பக்தர்கள் பரவச தரிசனம்

சர்ப்ப தோஷம் நீங்கும்:

இதில் நாக தோஷம் நீங்குவதற்கும், வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், ராகு கேது கிரங்கள் மற்றும் பிற நாக தோஷங்கள் விலக வேண்டியும், திருமணம், குழந்தைப்பேறு கிடைக்க வேண்டியும், பாவங்கள், நோய்கள் அகலவும், குடும்ப நலம், தைரியம் ஏற்படவும், எதிரிகள் தொல்லை அகலவும், நீண்ட ஆயுள், பணவரவு ஏற்படவும், ஸர்ப்ப தோஷம், மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள், சரும வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள் விலகவும், துர் ஆவிகள் பாதிப்புக்களில் இருந்து விலகவும், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow