அறுபடை வீடு ஆன்மீக சுற்றுலா.. அரோகரா முழக்கத்தோடு பக்தர்கள் பரவச தரிசனம்

முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமிமலை , திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை ஆன்மிகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.

Aug 9, 2024 - 08:44
 0
அறுபடை வீடு ஆன்மீக சுற்றுலா.. அரோகரா முழக்கத்தோடு பக்தர்கள் பரவச தரிசனம்
arupadai veedu murugan

அறுபடை வீடுகளுக்குச் செல்லும் ஆன்மிக சுற்றுலாப் பேருந்து நேற்று (ஆகஸ்ட் 7) கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றது. மொத்தம் 6 பேருந்துகளில், 204 பக்தர்கள் உட்பட 236 பேர் புறப்பட்டுச் சென்றனர்.பக்தர்கள் அனைவரும் கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா என்று முழக்கத்தோடு உற்சகத்தோடு கிளம்பி சென்றனர். 

முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஆன்மிக சுற்றுலா பயணம் உரிய வசதிகள் செய்து கொடுத்து அழைத்துச் செல்லப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சுவாமிமலை முருகன் கோயிலில் இருந்து, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 204 பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட மொத்தம் 236 பேர், 6 பேருந்துகளில் இன்று முருகனின் அறுபடை வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எஸ்.கல்யாணசுந்தரம் எம்பி ஆகியோர் கொடியசைத்து, ஆன்மிக சுற்றுலா பயணத்தைத் தொடங்கி வைத்து, பக்தர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். இந்த நிகழ்வில் கும்பகோணம் எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் சு.ப.தமிழழகன், அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி, கண்காணிப்பாளர் வி.பழனிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பேருந்தில் செல்பவர்கள் புதன்கிழமை திருத்தணி சென்றடைந்தனர் அங்கு தங்கிவிட்டு வியாழக்கிழமை காலையில் திருத்தணி முருகனை தரிசனம் செய்தனர். அதன்பிறகு, பேருந்துகள் பழநி சென்றடைந்தது. இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை பழநியில் தரிசனம் முடித்து விட்டு, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை கோயில்களுக்கு பேருந்துகள் செல்லும். அந்தக் கோயில்களில் தரிசனம் முடித்துவிட்டு அனைவரும் இரவு திருச்செந்தூர் சென்றடைவர். 

ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை காலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அன்று மாலை மீண்டும் அனைவரும் சுவாமிமலை திரும்புவர் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow