லைஃப்ஸ்டைல்

"சிலிண்டர் இல்லையா? கவலை வேண்டாம்!" நெருப்பில்லாமல் சமைக்க இதோ 3 பாரம்பரிய உணவுகள்!

நெருப்பில்லாமல் சமைக்க 3 பாரம்பரிய உணவுகள்..


Dishes to cook without fire (AI Image)
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகச் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில், எரிபொருள் செலவே இல்லாமல் மிக எளிமையாகச் செய்யக்கூடிய சத்தான உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கும், சேமிப்பிற்கும் கைகொடுக்கும்.

1. அவல் பாயசம் (வெல்லம் கலந்தது)

சிலிண்டர் தட்டுப்பாடு நேரத்தில் இனிப்புச் சுவையுடன் கூடிய சத்தான உணவாக இது அமையும்.

தேவையானவை: அவல் (கெட்டி அவல்), துருவிய தேங்காய், பொடித்த வெல்லம், ஏலக்காய்த் தூள், காய்ச்சாத பால் (அல்லது தேங்காய்ப்பால்).

செய்முறை: அவலை நன்றாகக் கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும். நீர் வடிந்த பிறகு, அதனுடன் பொடித்த வெல்லம், துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். கடைசியாகப் பால் சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான அவல் பாயசம் தயார்.

2. நாட்டுச் சர்க்கரை கலந்த கம்பு/கேழ்வரகுப் பால் கஞ்சி

தானியங்களை முளைக்க வைத்துப் பயன்படுத்துவது கூடுதல் பலன் தரும்.

தேவையானவை: முளைக்கட்டிய கம்பு அல்லது கேழ்வரகு மாவு, துருவிய தேங்காய், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்.

செய்முறை: முளைக்கட்டிய தானியங்களை அரைத்து அதன் பாலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அந்தப் பாலுடன் துருவிய தேங்காய், நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலக்கவும். இது சமைக்கப்படாத கஞ்சி என்றாலும், தானியங்களின் முழுச் சத்துகளையும் அப்படியே வழங்கும்.

3) பச்சைப்புளி ரசம்

தேவையானவை: புளி, சிறிய வெங்காயம் (4), பச்சை மிளகாய் (2), வரமிளகாய் (1), கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு, மற்றும் பெருங்காயத்தூள்.

செய்முறை: புளியை இரண்டு கப் தண்ணீரில் நன்றாகக் கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், கிள்ளிய வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து, உங்கள் கைகளாலேயே அனைத்தையும் நன்றாகப் பிசைந்து விடவும். இறுதியாகப் பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவினால் மணக்க மணக்க பச்சைப்புளி ரசம் தயார்.